குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்!

 

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்!

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி : 

நெல்லை மாவட்டம் குற்றாலநாதர் கோயில் ஆனது நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் சித்திர சபையாகத் திகழ்கிறது. மரத்தாலேயே ஆன அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சித்திர சபை பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும்.

kuttraalam

சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள் அனைத்தும் சித்திரங்களாக அழகுடன் தீட்டப்பட்டிருகின்றன. 

 குற்றாலநாத சுவாமி கோயிலில் அகத்தியர் கண்களை மூடிக்கொண்டு சிவனை பிரார்த்தனை செய்தவாறு அச்சிலையின் தலையில் தனது கையை வைத்து அழுத்த விஷ்ணுவின் சிலை குறுகி ஒரு சிவலிங்கமாக மாறியது. 

kuttralam

அகத்தியருக்கு சிவபார்வதி திருமணக் காட்சியும் கிடைத்தது அகத்தியரால் சிவத் திருமேனியாக மாற்றப்பட்டதால் லிங்கத் திருமேனியின் மீது அகத்தியரின் ஐந்து விரல்களும் பதிந்த அடையாளம் இருப்பதைக் இக்கோயிலில் இன்றும் காண முடிகிறது.

 இத்தகைய சிறப்புகள் வாய்ந்த குற்றால நாத சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள், வீதிஉலா ஆகியவை நடைபெற்றது. திருவிழாவின் 5 ஆம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது.

 காலை 8.30 மணிக்கு விநாயகர் தேர், முருகன் தேர் ஆகியவை வடம் பிடித்து இழுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நடராஜர் தேர் குற்றால நாத சுவாமி, குழல்வாய் மொழியம்மை தேர் ஆகிவையும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

kuttraalam

இதில் குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவில் வருகிற 21-ந் தேதி வெள்ளிக்கிழமை சித்திரை சபையில் காலை 10 மணிக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

இதனைஅடுத்து 23 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சித்திரை சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், காலை 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது.