குற்றவாளிகளால் தீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் மரணம்

 

குற்றவாளிகளால் தீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் மரணம்

குற்றவாளிகளால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் 23 வயதான பெண் ஒருவர் சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே பாலியல் பலாத்கார குற்றவாளிகள் 2 பேர் பெயிலில் வெளியே வந்தனர். 

மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்ட பெண்

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று வழக்கு விசாரணைக்காக ரேபரேலி நீதிமன்றத்துக்கு பாதிக்கப்பட்ட பெண் சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் அந்த பெண்ணை அடித்து, குத்தி அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பியோடி விட்டனர். இந்த சம்பவத்தை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் அந்த பெண்ணை காப்பாற்றும் போது அந்த பெண்ணின் 90 சதவீத உடல் எரிந்து இருந்தது.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதி

முதலில் சிகிச்சைக்காக உன்னாவ் மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டது பின் அங்கிருந்து கான்பூர் அதன் பிறகு கடைசியாக டெல்லி சப்தார்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தன்னை பாலியல் பலாத்காரம் செய்த 2 குற்றவாளிகள் உள்பட 5 பேர் தன்னை பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் வாக்குமூலம் கொடுத்து இருந்தார். கடந்த 40 மணி நேரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் பாதிக்கப்பட்ட பெண் உயிர் இழந்தார். இதுகுறித்து சப்தார்ஜங் மருத்துவமனை செய்தி தொடர்பாளர் கூறுகையில், மாரடைப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பெண் மரணம் அடைந்தார் என தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் மரணம்

பாதிக்கப்பட்ட பெண் இறப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன் மருத்துவமனையில் அவரது சகோதரர் அளித்த பேட்டியில், நேற்று எனது சகோதரி என்னை கட்டி பிடித்தபோது, என்னிடம் ஒரு விஷயத்தை சொன்னாள். என்னை காப்பாற்று, நான் இறக்க விரும்பவில்லை. ஆனால் அவர்கள் (குற்றவாளிகள்) தப்பிவிடக் கூடாது. அவர்கள் தூக்கிலிட வேண்டும் என உறுதியாக கூறினாள். நான் யாரும் தப்பிவிடமாட்டார்கள் என உறுதி அளித்தேன் என தெரிவித்தார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் இறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.