குறைய தொடங்கிய வெங்காய விலை! ஸ்வீட் எடு கொண்டாடு! மத்திய அரசு தகவல்

 

குறைய  தொடங்கிய வெங்காய விலை! ஸ்வீட் எடு கொண்டாடு! மத்திய அரசு தகவல்

கரீப் பருவ வெங்காய சாகுபடி சந்தைக்கு வர தொடங்கியுள்ளதால் வெங்காயத்தின் விலை குறைய தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

வெங்காயம் அதிகம் சாகுபடி செய்யப்படும் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. வெங்காய பயிர்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்தன. இதனால் சந்தைக்கு வெங்காய வரத்து குறைந்தது. வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

கனமழையால் பயிர்கள் சேதம்

வெங்காயத்தின் விலை உயர்வை தடுக்க முதலில் வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை உயர்த்தியது. மேலும் வர்த்தகர்கள் வெங்காய கையிருப்பு வைக்க உச்ச வரம்பு விதித்தது மற்றும் பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கியது. இது தவிர தனது கையிருப்பில் உள்ள வெங்காயத்தை வெளிச்சந்தையில் மத்திய அரசு விற்பனை செய்ய தொடங்கியது. அப்படியும் வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதனையடுத்து வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால் சந்தைக்கு வெங்காய வரத்து அதிகரித்தது.

வெங்காய பயிர்

இந்நிலையில், பருப்புகள், வெங்காயம், தக்காளி மற்றும் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட அத்தியாவசியமான உணவு பொருட்கள் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக பதுக்கல், கூட்டணி அமைத்தல் மற்றும் ஊக வணிகம் ஆகியவற்றை கண்காணிக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவின் 18வது கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய நுகர்வோர் துறை அமைச்சக செயலளர் அவினாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாய அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

வெங்காயம்

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கரீப் பருவ வெங்காய சாகுபடி சந்தைக்கு வரதொடங்கியதால் தற்போது வெங்காயத்தின் விலை குறைய தொடங்கியுள்ளது. மாநிலம் மற்றும் மாவட்ட அளவில், வெங்காயம், பருப்புகள், சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் மொத்தவிற்பனையாளர்கள், வர்த்தகர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் அடிக்கடி சந்திப்பு நடத்தும்படி அனைத்து தலைமை செயலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது என தெரிவித்தார்.