குரூப் 4 தேர்வு முறைகேடு.. சிக்கிய தேர்வர்கள், இடைத்தரகர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு!

 

குரூப் 4 தேர்வு முறைகேடு.. சிக்கிய தேர்வர்கள், இடைத்தரகர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு!

அந்த தேர்வர்களைக் கடந்த 13 ஆம் தேதி நேரில் அழைத்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரித்தனர். அதில் பல பேர் ஒரே மாதிரியான பதிலை அளித்தது அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் முடிவுகள் நவம்பர் 25ஆம்  தேதி வெளியானது. அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வெழுதிய 40 பேர் தர வரிசை பட்டியலில் முதலிடம் பிடித்ததால் சந்தேகம் எழுந்தது. இதனால், அந்த தேர்வர்களைக் கடந்த 13 ஆம் தேதி நேரில் அழைத்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரித்தனர். அதில் பல பேர் ஒரே மாதிரியான பதிலை அளித்தது அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ttn

இந்த விவகாரத்தில் இன்னும் சில அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகின. அதாவது, முறைகேடுகளில் ஈடுபட்ட நபர்கள் இடைத்தரகர்களிடம் இருந்து சில மணி நேரங்களில் மறையக்கூடிய மையாலான பேனாவை பயன்படுத்தித் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் படி, குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் சர்ச்சைக்குரிய  9 தேர்வு மையங்களில் நடந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 99 தேர்வர்களைத் தகுதி நீக்கம் செய்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் உத்தரவிட்டது. அதுமட்டுமில்லாமல், வாழ்நாள் முழுவதும் அவர்கள் தேர்வு எழுத முடியாத படி அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

yttn

அதனைத் தொடர்ந்து, முறைகேடுகளில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது கூட்டுச்சதி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 6 வழக்குகளின் கீழ்  சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த முறைகேடு குறித்த விசாரணையைத் துரிதப் படுத்த 3 தனிப்படை அமைக்கப்பட்டு டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.