குருப்பெயர்ச்சி 2018 : திருச்சி உத்தமர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது

 

குருப்பெயர்ச்சி 2018 : திருச்சி உத்தமர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது

குரு பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு நேற்று உத்தமர் கோயிலில் சிறப்பு பரிகார ஹோமங்களும் மற்றும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

நவகிரகங்களில் ராஜ குரு என்று அழைக்கப்படும் குருபகவானின் பெயர்ச்சி இன்று நடைபெற உள்ளது.ஜோதிடத்தில் குரு பகவான் பிரகஸ்பதி,தனகாரகன்,புத்திரகாரகன், பொன்னவன்  என்றெல்லாம் குரு பகவானைச் சிறப்பித்துச் சொல்வார்கள்.

இத்தகைய சிறப்புக்குரிய குருபகவான் இன்று இரவு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசியில் பிரவேசிக்க இருக்கிறார். இதில் குரு பார்வையால் கடகம், ரிஷபம், துலாம், மீனம் ராசிக்காரர்கள் நன்மை அடைவார்கள் என்றும் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ராசிக்காரர்கள் பரிகார பூஜைகள் செய்து கொள்ள வேண்டும் என்றும் பல்வேறு ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

gurupeyerchikllk

திருச்சி  டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் குருபரிகார தலமாக விளங்கும் உத்தமர் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குரு பெயர்ச்சியையொட்டி நேற்று சிறப்பு பரிகார ஹோமங்கள் நடைபெற்றது. இதை முன்னிட்டு மாலை 6 மணிக்கு பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்கள் கோவில் வெளி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த பூ பந்தலில் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனியாக எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து தட்சிணாமூர்த்தி சன்னதியில் புண்யாகவாசனம்,பஞ்சகவ்யம் பூஜை, அர்ச்சனை நடைபெற்று, மகா கணபதி ஹோமமும் நடைபெற்றது.

இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் நவதானியங்கள் மற்றும் ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, மாசிக்கா, மாசிபச்சை உள்ளிட்ட 96 வகையான மூலிகை பொருட்களை கொண்டு குரு பிரீத்தி, நவக் கிரக, வஸ்வதாரா ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.

gurupeyerchijkdk

இதனைதொடர்ந்து இரவு 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு அபிஷேகம், விசேஷ பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார ராசிக்காரர்கள் தங்கள் ராசிகளுக்கு பரிகாரம் செய்து தெய்வங்களை வழிபட்டனர். குரு பெயர்ச்சி விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் சார்பாக மிகவும் விரிவாக ஏற்பாடு செய்யபட்டிருந்தது .