குமாரபாளையம் ‘அம்மன் மெஸ்’ போறீங்களா! அந்த ரசத்தையும் குல்கந்தையும் மறக்கவே மாட்டிங்க!

 

குமாரபாளையம் ‘அம்மன் மெஸ்’ போறீங்களா! அந்த ரசத்தையும் குல்கந்தையும் மறக்கவே மாட்டிங்க!

பவானி ஆற்றுப் பாலம் தாண்டியதும் இடது புறம் திரும்பி குமாரபாளையம் போகும் சாலையில், ஒரு நூறு மீட்டர் போனால் இடது புறத்தில் இருக்கிறது அம்மன் மெஸ்

பவானி ஆற்றுப் பாலம் தாண்டியதும் இடது புறம் திரும்பி குமாரபாளையம் போகும் சாலையில், ஒரு நூறு மீட்டர் போனால் இடது புறத்தில் இருக்கிறது அம்மன் மெஸ். முதலில் ஒரு விசயத்தை நினைவில் வைத்துக்கொண்டு உள்ளே நுழையுங்கள்.இந்த உணவகத்தில் எல்லாமே சிறப்பாகத்தான் இருக்கும். ஆனால்,இங்கே தரப்படும் ரசம் இணையற்றது.ஆகவே அதற்கு கொஞ்சம் இடம் ரிசர்வ் செய்து வையுங்கள்,உங்கள் வயிற்றுக்குள்வாருங்கள் உள்ளே போவோம்.

எல்லா நல்ல உணவகங்களைப்  போலவே இதுவும் மதியம் ஒரு வேளை மட்டுமே இயங்குகிறது.மதியம் 12.30 முதல் 3.30 வரை ,ஒரு நாளைக்கு மூன்றுமணி நேரம் மட்டுமே இயங்குகிறது.இரண்டே அறைகள்தான்.ஒரே சமயத்தில் இருபது பேர் சாப்பிடலாம்.உள்ளே இடம் இல்லாவிட்டால் வெளியே காத்திருக்க சொல்கிறார்கள்.காத்திருக்கலாம் தப்பில்லை.

ஹைதர் கால மேஜை,நாற்காலிகள் போட்டிருக்கும்.முதலில் ஒரு பெரிய சைஸ்  வாழை இலையைக் கொண்டு வந்து போட்டுவிட்டு,மட்டன் குழம்பு,சிக்கன் குழம்புகள் வைக்கிறார்கள்.சாப்பாடு ஒரு முறத்தில் சோற்றைக் கொண்டுவந்து வார்கள்.இதற்குப்பிறகு உங்கள் சாமர்த்தியம்.

food

குழம்புகள் அதிகம் காரமில்லாமல் இருக்கும்.மசாலா வாசனை அடக்கமாக இருக்கும்.கொத்துக்கறி என்று ஒரு ஐட்டம் தருகிறார்கள்,சைட் டிஷ்தான் அதை பற்றி கவலைப்படாமல் அதை அப்படியே சோற்றில் கொட்டி,மேஜையில் வைத்து இருக்கும் மட்டன் குழம்பு ஒரு கரண்டியையும் சேர்த்துக் கொண்டு குழப்பி அடித்தால்,சொர்க்கம் பக்கத்தில்!

மட்டன் வறுவல்,சிக்கன் போன்லெஸ்,பிச்சுப்போட்ட கோழி,என்று இன்னும் வெரைட்டிகள் வரிசை காட்டுகின்றன. அடுத்தது,இங்கே உள்ள இரண்டு முட்டை ஐட்டங்கள்.காய்ந்த வர மிளகாய் கொஞ்சம் கூடுதலாகவே சேர்த்து கடலை எண்ணையில் செய்த ஆந்திரா முட்டைப் பொரியல்.

அடுத்ததாக சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய்,பெப்பர் காம்போவில் செய்யப்பட்ட ஸ்பெஷல் கலக்கி, இதில் ஏதேனும் ஒன்றையோ,அல்லது இரண்டையுமோ ஆர்டர் செய்துவிட்டு ,சோற்றை முதலில் நன்றாக பிசைந்து கொண்டு அதில் இந்த உணவகத்தின் சூப்பர் ஸ்டார் ரசத்தை ஊற்றி வெளுத்துக் காட்டுங்கள். 

food

இதற்குப் பிறகும் வயிற்றில் இடம் இருக்கும் அதிர்ஷ்டசாலியா நீங்கள்?
கொஞ்சமாக சோறு போட்டுக்கொண்டு தயிர் கேளுங்கள்,சோற்றில் தயிர் ஊற்றி பிசைகையில் கொஞ்சம் தேன் வந்து சேரும்,அட !என்று நீங்கள் வியந்து முடிப்பதற்குள்,ரோஜா குல்கந்த்தும் வந்து சேரும்.

இப்படி ஒரு காம்போவை இதற்கு முன் நீங்கள் கண்டிருக்கவே மாட்டீர்கள் ! இந்த மெஸ்ஸுக்கு போகும் போது நான்கு பேராக சேர்ந்து போனால் நல்லது.ஆளுக்கொரு ஐட்டங்ககளை கேட்டு வாங்கி வெரைட்டியான டேஸ்ட்டை ருசிக்கலாம்.பாஸ்,அந்த ரசத்தையும் குல்கந்தையும் மறந்திராதிங்க!