குடும்பம்தான் முதல்ல அப்புறம்தான் அரசியல்! ராஜ் தாக்கரே எடுத்த முடிவால் சிவ சேனா ஹேப்பி

 

குடும்பம்தான் முதல்ல அப்புறம்தான் அரசியல்! ராஜ் தாக்கரே எடுத்த முடிவால் சிவ சேனா ஹேப்பி

சிவ சேனா கட்சி சார்பாக வோர்லி தொகுதியில் போட்டியிடும் தனது மருமகன் ஆதித்யா தாக்கரேவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த போவதில்லை என நவநிர்மான் சேனா கட்சி தலைவரும், அவரது மாமாவுமான ராஜ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை பா.ஜ.க.வும், சிவ சேனாவும் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன. சிவ சேனா 124 இடங்களில் போட்டியிடுகிறது. மேலும், சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரே இந்த தேர்தலில் வோர்லி தொகுதியில் களம் இறங்குகிறார். தாக்கரே குடும்பத்தை சேர்ந்த ஒரு நபர் தேர்தலில் போட்டியிடுவது இதுதான் முதல் முறை.

ஆதித்யா தாக்கரே

இதனால் ஆதித்யா தாக்கரே மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும், ஆதித்யா தாக்கரேவை தங்களது முதல்வர் வேட்பாளராக சிவசேனா உருவாக்கி வருகிறது. இதற்கிடையே சிவசேனாவிலிருந்து விலகி தனியாக கட்சி நடத்தி வரும் பால்தாக்கரேவின் மருமகன் ராஜ் தாக்கரே தனது கட்சி மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் என அறிவித்து இருந்தார். அதேசமயம் தனது மருமகன் ஆதித்யா தாக்கரேவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவாரா என்ற சந்தேகம் இருந்தது.

தந்தை உத்தவ் தாக்கரேவுடன் ஆதித்யா

தற்போது அந்த சந்தேகத்துக்கு விடை கிடைத்துள்ளது. மராத்தி வாக்குகள் பிரிந்து விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக ஆதித்ய தாக்கரேவுக்கு எதிராக தனது கட்சி சார்பாக எந்தவொரு வேட்பாளரையும் நிறுத்த வேண்டாம் என ராஜ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதித்யா தாக்கரேவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி அதனால் குடும்பத்தில் எந்த பிரச்னையும் ஏற்பட்டு விட கூடாது என்ற எண்ணத்தில்தான் இந்த முடிவை எடுத்ததாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அது எப்படி இருந்தாலும் ஒட்டு மொத்தத்தில் ராஜ் தாக்கரே முடிவால் சிவ சேனா தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.