குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வேம்; ஹரியானா இஸ்லாம் குடும்பத்தினர் எச்சரிக்கை!

 

குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வேம்; ஹரியானா இஸ்லாம் குடும்பத்தினர் எச்சரிக்கை!

உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீட்டால் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் கண்டும் காணாமல் நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்

புதுதில்லி: ஹோலி பண்டிகையின் போது மர்ம கும்பல் ஒன்றால் தாக்குதலுக்கு உள்ளான இஸ்லாமிய குடும்பத்தினர் சம்பவம் தொடர்பான விசாரணையில் போலீசார் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஹரியான மாநிலம் குருகிராம் அருகே உள்ள கிராமத்தில் இஸ்லாமிய குடும்பம் ஒன்று வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஹோலி பண்டிகையின் போது, அவர்களது வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை புரிந்துள்ளனர். விருந்தினர்கள் அனைவரும் ஒன்று கூடிய மகிழ்ச்சியில் பெண்கள் வீட்டில் உணவு சமைத்துக் கொண்டிருக்க, அருகில் உள்ள காலியான இடத்தில் அக்குடும்பத்தினரும், வீட்டுக்கு வந்த உறவினர்களில் சிலரும், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுங்கள் என்று கூறி அவர்களை தாக்கி விட்டுச் சென்றுள்ளது.

haryana attack

அதன்பின்னர், மீண்டும் அவர்கள் 25-க்கும் மேற்பட்ட கும்பலுடன் வந்து இஸ்லாமிய குடும்பம் வசித்து வந்த வீட்டிற்குள் புகுந்து அவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதில் அக்குடும்பத்தின் பெண்கள் உள்பட பல்வேறு நபர்கள் படுகாயமடைந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

தாக்குதல் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், இதுவரை 6 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், இந்தத் தாக்குதலில் 20 முதல் 30 நபர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

arrest

இந்நிலையில், இந்த வழக்கு போலீசார் அலட்சியமாக செயல்படுவதாகவும், உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீட்டால் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் கண்டும் காணாமல் நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டும் தாக்குதலுக்கு உள்ளான இஸ்லாமிய குடும்பத்தினர், இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மறுத்துள்ள காவல்துறை, இரு தரப்பினரும் சண்டையிட்டுக் கொண்டனர் எனவும், சம்பவம் தொடர்பாக தாங்கள் இதுவரை 13 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிங்க

பாராளுமன்ற வேட்பாளர்களில் மிகப் பெரிய கோடீஸ்வர வேட்பாளரும், பரம ஏழை வேட்பாளரும் யாருன்னு தெரியுமா!?