குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக ஏன் வாக்களிக்கவில்லை?… மோடிக்கு செக் வைத்த மம்தா பானர்ஜி….

 

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக ஏன் வாக்களிக்கவில்லை?… மோடிக்கு செக் வைத்த மம்தா பானர்ஜி….

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக ஏன் வாக்களிக்கவில்லை என பிரதமர் மோடிக்கு கேள்ளி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாத மத்திய அரசு அதனை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் நாடாளுமன்ற மக்களவையில் குடியுரிமை மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அந்த மசோதா தொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் கடுமையான விவாதம் சுமார் 12 மணி நேரம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு

இறுதியில் குடியுரிமை மசோதா நிறைவேற்றுவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 311 பேரும் எதிராக வெறும் 80 பேர் மட்டுமே வாக்களித்தனர். இதனையடுத்து அந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. பின் ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமாக உருவெடுத்தது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மோடி

இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தில் குடியுரிமை மசோதாவை தாக்கல் செய்த போது பிரதமர் மோடி அவையில் இல்லை. குடியுரிமை திருத்த சட்டம் நல்லது என்றால் அப்பம் ஏன் பிரதமர் அதற்கு வாக்களிக்கவில்லை. 2 நாட்கள் நீங்கள் (மோடி) நாடாளுமன்றத்தில் இருந்தீர்கள் ஆனால் நீங்கள் அதற்கு (குடியுரிமை திருத்த மசோதா) வாக்களிக்கவில்லை. அதனால் நீங்கள் அதனை ஆதரிக்கவில்லை. அதனை நிராகரிக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன் என தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் வரும் 23ம் தேதியன்று குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கூட்டத்துக்கு மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ளார்.