குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதிலிருந்து மாநில அரசுகள் தப்பிக்க முடியாது- ரவி சங்கர் பிரசாத் தகவல்

 

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதிலிருந்து மாநில அரசுகள் தப்பிக்க முடியாது- ரவி சங்கர் பிரசாத் தகவல்

குடியுரிமை திருத்த சட்டத்தை மாநில அரசுகள் கட்டாயம் அமல்படுத்தியே தீர வேண்டும், தப்பிக்க முடியாது என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து மததுன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்தது. இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களில் ஒரு பிரிவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, அம்மாநில அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் சில மாநில அரசுகளும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என வெளிப்படையாக பேசி வருகின்றன. ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்தியே தீர வேண்டும் தப்பிக்க முடியாது என மத்திய அரசு கூறுகிறது.

கேரள முதல்வர் பினராய் விஜயன்

மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இது குறித்து கூறியதாவது: கேரள அரசின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது. வாக்குவங்கி அரசியல் காரணமாக பல மாநிலங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கூறி வருவதே நாங்கள் கவனித்தோம். அந்த மாநிலங்கள் தயவு செய்து சட்ட ஆலோசனை பெறுங்கள் என நான் அவர்களை நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன். பிரிவுகள் 245,256 மற்றும் பிற விதிகளின்படி இயற்கைமயமாக்கல் மற்றும் குடியுரிமை  தொடர்பான சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்துக்கு முழு அதிகாரம் உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு

அரசியலமைப்பு பிரிவு 256ன்படி நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு மாநில அரசுகள் இணங்க கடமைப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் மாநில அரசுகள் தப்பிக்க முடியாது. குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.