குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமர் மோடிக்கு அரசியலமைப்பு புத்தகத்தை அனுப்பிய காங்கிரஸ்….

 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமர் மோடிக்கு அரசியலமைப்பு புத்தகத்தை அனுப்பிய காங்கிரஸ்….

குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது என்பதை வெளிப்படுத்தும் விதமாக, பிரதமர் மோடிக்கு அரசியலமைப்பு புத்தகத்தை காங்கிரஸ் கட்சி அனுப்பியுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் எதிர்க்கட்சிகளும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி இந்த சட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பிரதமர் மோடி

மத அடிப்படையில் பாகுபடுத்தும் நடவடிக்கை, அரசியலமைப்புக்கு விரோதமானது என குடியுரிமை திருத்த சட்டத்துக்கு காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது என்பதை படித்து தெரிந்து கொள்ளும்படி,  அரசியலமைப்பு புத்தகம் ஒன்றை பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி அனுப்பியுள்ளது.

அமேசான் ரசீது
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி டிவிட்டரில், அன்பான பிரதமர், அரசியலமைப்பு புத்தகம் விரைவில் உங்களுக்கு வந்து சேரும். நாட்டை பிரிப்பதில் இருந்து உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது தயவு செய்து அதைப் படியுங்கள். அன்புடன் காங்கிரஸ் என பதிவு செய்துள்ளது. மேலும், புத்தகம் அனுப்பியதற்கான அமேசான் ரசீது சீட்டை ஸ்னாப்ஷாப் எடுத்து பதிவேற்றம் செய்துள்ளது. அந்த ரசீதில் புத்தகம் மத்திய செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.