குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ராஜஸ்தான் அரசு தீர்மானம்….. பா.ஜ.க. கடும் எதிர்ப்பு

 

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ராஜஸ்தான் அரசு தீர்மானம்….. பா.ஜ.க. கடும் எதிர்ப்பு

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி அம்மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் முடிந்தவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும். 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு

அதேசமயம் இந்த குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது, மத அடிப்படையில் நாட்டை பிரிக்கும் நடவடிக்கை என ஒரு பகுதியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் மத்திய அரசை வரிந்து கட்டி எதிர்த்து வருகின்றனர். மேலும், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதனை தொடர்ந்து பஞ்சாப்பில் காங்கிரஸ் தலைமையிலான அரசும் அதே போன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

பா.ஜ.க.

தற்போது 3வது மாநிலமாக ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான அரசும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் இது குறித்து கூறுகையில், மத அடிப்படையில் மக்களை பாகுபாடுப்படுத்தும், அரசியலமைப்பின் மதச்சார்ப்பற்ற கொள்கைகளுக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இந்திய வரலாற்றில் முதல்முறையாக மத அடிப்படையில் மக்களை பாகுபாடுப்படுத்தும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதேசமயம் பா.ஜ.க. இது குறித்து கூறுகையில், திருப்திப்படுத்தும் அரசியலில் காங்கிரஸ் அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டியது.