குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி! பா.ஜ.க. எம்.பி. எச்சரிக்கை…..

 

குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி! பா.ஜ.க. எம்.பி. எச்சரிக்கை…..

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த முடியும் என பா.ஜ.க. எம்.பி. உதய் பிரதாப் சிங் எச்சரிக்கை செய்தார்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் இதுவரை எந்தவொரு மாநிலத்திலும் அமல்படுத்தப்படவில்லை. அதேசமயம் அந்த சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றன. மேலும் கேரளா, பஞ்சாப் மற்றும் சட்டீஸ்கர்  உள்ளிட்ட மாநில அரசுகள் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கின்றன. 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம்

இந்த சூழ்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த முடியும் என பா.ஜ.க. எம்.பி. உதய் பிரதாப் சிங் எச்சரிக்கை செய்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்களில் குடியரசு தலைவர் அரசியலமைப்பு 356வது பிரிவில் அளிக்கப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்

அரசியலமைப்பு விதிமுறைகளுக்கு இணக்கமாக மாநில அரசு செயல்படவில்லை என்பது குடியரசு தலைவருக்கு சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியானால், எந்தவொரு மாநிலத்தின் நிறைவேற்று மற்றும் சட்டமன்ற அதிகாரங்களையும் யூனியனில் இருந்து விலக்குவதற்கு இந்திய அரசியலமைப்பின் 356வது பிரிவில் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் அனைத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.