குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் மாநிலங்கள்! மம்தாவும் நிறைவேற்றினார்.. நெருக்கடியில் பா.ஜ.க. அரசு

 

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் மாநிலங்கள்! மம்தாவும் நிறைவேற்றினார்.. நெருக்கடியில் பா.ஜ.க. அரசு

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி மேற்கு வங்க சட்டப்பேரவையில் அம்மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியது. கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகியவற்றை தொடர்ந்து அந்த சட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றிய 4வது மாநிலம் மேற்கு வங்கம்.

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி முதலாவதாக கேரள அரசு அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இதனை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் அம்மாநில அரசுகள் குடியரசு திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றின.

திரிணாமுல் காங்கிரஸ்

இந்நிலையில் நேற்று மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு அம்மாநில சட்டப்பேரவையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டபோது மம்தா பானர்ஜி பேசுகையில், சி.பி.ஐ. (எம்) மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, பாசிச பா.ஜ.க.வுக்கு எதிரான ஒன்றுபட வேண்டும். என்.பி.ஆர்., என்.சி.ஆர். மற்றும் சி.ஏ.ஏ. ஆகியவை ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை. மேலும் சி.ஏ.ஏ. மக்களுக்கு எதிரானது. மத்திய அரசு இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

பா.ஜ.க

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது. ஆனால் இதற்கு பொது மக்களில் ஒரு பகுதியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் எதிர்க்கட்சிகளும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி இந்த சட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.