குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் கலவரமாக வெடிக்கும் அபாயம்! உ.பி. பெங்களூரு, மங்களூருவில் 144 தடை உத்தரவு….

 

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் கலவரமாக வெடிக்கும் அபாயம்! உ.பி. பெங்களூரு, மங்களூருவில் 144 தடை உத்தரவு….

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறி வரும் சூழ்நிலையில், இன்று உத்தரப் பிரதேசம், பெங்களூரு மற்றும் மங்களூருவில் 144 பிரிவின்கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை மதோவை மத்திய அரசு நிறைவேற்றியது. மேலும் குடியரசு தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்ததையடுத்து அது சட்டமாக மாறியது. குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் முடிந்தவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும். 

போராட்டத்தில் மக்கள்

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்தது. உத்தரப் பிரதேசத்தில் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறின. இதனையடுத்து இன்று உத்தரப் பிரதேசத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

போராட்டத்தில் மக்கள்

இது தொடர்பாக உத்தரப் பிரதேச டி.ஜி.பி. ஓ.பி. சிங் டிவிட்டரில், குற்றவியல் நடைமுறை சட்டம் செக்சன் 144ன் கீழ் (சட்டவிரோதமாக கூடுவதற்கு தடை) உத்தரவு அமலுக்கு வந்துள்ளது மற்றும் டிசம்பர் 19ம் தேதியன்று எந்தவொரு கூட்டத்துக்கு அனுமதி கொடுக்கவில்லை. அதனால் அதில் பங்கேற்காதீர்கள். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என பதிவு செய்துள்ளார். இதுதவிர கர்நாடக மாநிலம் மங்களூருவில் அந்நகர போலீஸ் கமிஷனர் நேற்று முதல் டிசம்பர் 20 அதிகாலை 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பெங்களூருவில் 3 நாட்கள் (இன்று காலை 6 மணி முதல் டிசம்பர் 21ம் தேதி நள்ளிரவு வரை) 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.