குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பினர் போராட்டம் !

 

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பினர் போராட்டம் !

புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் வழக்கறிஞர் சார்பாக நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கின்றன. டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும் குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் வட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்களைக் கட்டுப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்தும் நாளுக்கு நாள் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இதனால் போராட்டங்களை நிறுத்துவதற்காக மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 

ttn

போராட்டங்கள் நடைபெறும் டெல்லி, உத்திர பிரதேசம், கர்நாடகா, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏர்டெல் போன் கால்கள் மற்றும் இணையச் சேவையை முடக்கியுள்ளது.  இந்நிலையில், அகில இந்திய வழக்கறிஞர் சங்க தேசிய குழு உறுப்பினர் ஆனந்த் தலைமையில் கோவை நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ttn

அதில், மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். மேலும், புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் வழக்கறிஞர் சார்பாக நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.