குடியரசு தின விழா கொண்டாட்டம்: நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு

 

குடியரசு தின விழா கொண்டாட்டம்: நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு

நாட்டின் 70வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

புதுதில்லி: நாட்டின் 70வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 70வது குடியரசு தினவிழா ஜனவரி 26-ம் தேதி (நாளை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மாநிலங்களின் தலைநகரங்களில் நடைபெறும் விழாவில்  அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசியக் கொடி ஏற்றி அனுவகுப்பு மரியாதையை ஏற்கின்றனர்.

தில்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ண கொடியேற்றுகிறார். அதன் பின்னர், வரலாற்று சிறப்புமிக்க ராஜபாதையில் கலை நிகழ்ச்சிகளும்,  வீரதீர செயல்களும், ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்புகளும் நடைபெறும். ராணுவ வீரர்கள், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்கிறார். ஆண் படையினரின் கம்பீர அணிவகுப்புக்கு வரலாற்றிலேயே முதன் முறையாக பெண் லெப்டினன்ட் பாவனா கஸ்தூரி தலைமை தாங்குகிறார்.

பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வரவுள்ளன. இந்த நிகழ்ச்சியை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் தில்லியில் குவிந்துள்ளனர். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போஸா கலந்து கொள்கிறார்.

குடியரசு தின அணிவகுப்பு நடக்கும், ராஜபாதை முழுவதும், போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு தில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய வீரர்கள்  தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்திற்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பும், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளன.

குடியரசு தினவிழாவை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடையே இன்று உரை நிகழ்த்தி வருகிறார். நாட்டு விடுதலைக்காக போராடியவர்களையும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றையும் இந்த நேரத்தில் நினைத்து பார்க்க வேண்டும். காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை நாம் போற்ற வேண்டும் என தனது உரையில் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது உரை தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்படுகிறது. குடியரசுத்தலைவர் ஆற்றும் உரையின் தமிழாக்கத்தை இன்று இரவு ஒன்பதரை மணிக்கு  சென்னை வானொலி நிலையம் ஒலிபரப்பவுள்ளது.