குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கும்; மக்கள் அச்சம் அடைய வேண்டாம்

 

குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கும்; மக்கள் அச்சம் அடைய வேண்டாம்

கேன் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கும் என தமிழ்நாடு தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

சென்னை: கேன் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கும் என தமிழ்நாடு தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், தனியார் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள், நிலத்தடி நீரை எடுப்பதற்கு அரசிடம் தடை இல்லா சான்று பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து 75 குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த மனுவுக்கு பதில் அளித்த தமிழக அரசு, வர்த்தக நோக்கத்திற்காக நிலத்தடி நீரை தனியார் நிறுவனங்கள் உறிஞ்சுவதை தடை செய்யவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக கூறியது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வருங்கால சமுதாயத்துக்கு தேவையான நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளது என கூறி, தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், கேன் குடிநீர் உற்பத்தியை சில நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. அதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தில்  ஈடுபட்டுள்ளன. எனவே, சென்னியில் தண்ணீர் தட்டுப்பாடு ஆரம்பித்து விட்டதாக தகவல் பரவியது. அதனை உறுதி செய்யும் விதமாக சென்னையில் இயங்கி வரும் பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ இன்று மூடப்பட்டது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவே அந்த வணிக வளாகம் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பராமரிப்புப் பணிக்காக இன்று மூடப்படுவதாக எக்ஸ்பிரஸ் அவென்யூ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், கேன் குடிநீர் தங்குதடையின்றி கிடைக்கும். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். சிலர் உற்பத்தியை நிறுத்துவதால் ஒட்டுமொத்த மாநிலத்திற்கே பாதிப்பு ஏற்படும் என்பது போல் வதந்தி பரப்புகின்றனர். மக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.