கிரிவலம் போறீங்களா… இதைப் படிச்சுட்டு போங்க!

 

கிரிவலம் போறீங்களா… இதைப் படிச்சுட்டு போங்க!

மாதம் மாதம் பெளர்ணமி அன்று கிரிவலம் போவதை நிறைய பேர் சமீபகாலங்களாக கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். ஆனால், அப்படி கிரிவலம் செல்வதற்கான காரணங்களையும், தத்துவங்களையும், பலன்களையும் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாமல், எல்லோரும் செல்கிறார்கள் என்பதற்காகவே செல்கிறார்கள். இனி, எல்லோரும் செல்கிறார்கள் என்பதற்காக கிரிவலம் செல்லாமல், திருவண்ணாமலையில் எந்தகிழமை கிரிவலம் வந்தால் என்ன பலன்கள்? கிரிவலத்தின் போது எந்த முறையில் தரிசிக்க வேண்டும் என்பதையெல்லாம் தெரிந்துக் கொண்டு செல்லுங்கள்!
எமலிங்கத்தின் வாசலில் நின்று அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதற்கு ஒளதும்பர தரிசனம் என்று பெயர். இந்த தரிசனம், நமக்குக் கிடைக்கும் மாபெரும் செல்வத்தை நன்முறையில் பயன்படுத்துவதற்கான தீர்க்காயுளைப் பெற வைக்கும்.  அப்படிப் பெற்றப் பின்னர், கிரிவலத்தைத் தொடரவேண்டும்.
கிரிவலப்பாதையில் செங்கம் சாலையிலிருந்து வலது புறம் திரும்பியதும் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இப்படி தரிசனம் செய்வதற்கு பரஞ்ஜோதி திருமுக தரிசனம் என்று பெயர். இந்த தரிசனம் செய்யும் போதே நமக்கு தகுதியிருந்தால், பலவிதமான சூட்சும காட்சிகளை கிரிவலத்தின் போது காண முடியும். 

குபேரலிங்கத்தின் வாசலிலிருந்து திருவண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதற்கு வைவஸ்வத லிங்கமுக தரிசனம் என்று பெயர். அஷ்டமுக திக்கு தரிசனங்களில் இது மிகவும் முக்கியமான தரிசனம் ஆகும். தொடர்ந்து வந்து, பூதநாராயணப் பெருமாளிடம் கிரிவலத்தை முடிக்க வேண்டும். பூதநாராயணப் பெருமாளிடம் நமதுப் பொருளாதாரப் பிரார்த்தனைகளை வைக்க வேண்டும். இங்கிருந்தும், திருவண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இந்த தரிசனத்திற்கு சத்தியநாராயண தரிசனம் என்றுபெயர். 

கிரிவல பலன்கள்:

ஒவ்வொரு கிழமையும் வலம் வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.
நம்முடைய பாவங்கள் தொலைய ஒரே வழி கிரிவலம்தான். 
ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிவலம் வந்தால், உடல் பிணி போகும். சிவகதி கிடைக்கும். 
திங்கட்கிழமைகளில் கிரிவலம் வந்தால், நிறைய ஆற்றல் கிடைக்கும்.
செவ்வாய் கிரிவலம் வறுமையை நீக்குவதற்கும், பிறவிப் பிணிகளை நீக்குவதற்கும் உகந்தது.
புதன் கிழமைகளில் கிரிவலம் வந்தால், எல்லா வித்தைகளிலும் மேம்பாடு அடையலாம்.
வியாழன் ஞானத்திற்கான நாள். வியாழனன்று கிரிவலம் வருவது நமது ஞானத்தைக் கூட்டும்.
வெள்ளிக்கிழமைகளில் கிரிவலம் வந்தால்  விஷ்ணு பதத்தை பெறலாம்.
சனிக்கிழமைகளில் கிரிவலம் வருவது, நவக்கிரகங்கள் கொடுக்கும் நற்பலன்களை அனைத்தையும் பெறுவதற்கு வழிவகுக்கும்.
இனி கிழமைகளையும் மனதில் வைத்து கிரிவலம் செல்லுங்கள்!