கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

 

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை கேப்டன் விராட் கோலி முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது

விசாகப்பட்டினம்: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை கேப்டன் விராட் கோலி முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா வந்துள்ளது. அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணி இங்கு ஆடிய 7 ஒரு நாள் போட்டிகளில் 6-ல் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது.

இந்த மைதானத்தில் டாஸில் தோற்ற அணி போட்டியை வென்றதாகச் சரித்திரம் இல்லை. இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 7 ஒருநாள் போட்டிகளிலும் டாஸ் வென்ற அணியே வெற்றிபெற்றுள்ளது. எனவே, டாஸ் வெல்வதும் இந்த மைதானத்தில் முக்கியமான ஒன்றாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் தொடரில் தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் ஒருநாள் போட்டியில், குறிப்பாக பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டது. ஆனால், பந்து வீச்சில் சொதப்பியது. எனவே, இரண்டாவது ஒருநாள் போட்டியில் அந்த அணியின் பந்துவீச்சாளர்களும் பொறுப்புடன் செயல்பட்டால், அது இந்திய அணிக்கு கடும் சவாலாக அமையும். எனவே, டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடிகொடுக்கும் வகையில் அந்த அணி வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை, முன்வரிசை வீரர்களான ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி வலுவான நிலையில் உள்ளனர். தொடர் வெற்றிகளை இந்திய அணி குவித்து வருவதால், இந்த போட்டியிலும் வெற்றி பெற வீரர்கள் முனைப்பு காட்டுவர்.

இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை கேப்டன் விராட் கோலி முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 81 ரன்கள் சேர்த்தால், விரைவாக 10 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். இதுவரை, 204 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோலி 9,919 ரன்கள் குவித்துள்ளார்.

முன்னதாக, 259 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.