கிரிக்கெட்டை தாண்டி நேசிக்கப்படும் தல தோனி: இளம் மாற்றுத் திறனாளி ரசிகருடன் நெகிழ்ச்சி

 

கிரிக்கெட்டை தாண்டி நேசிக்கப்படும் தல தோனி: இளம் மாற்றுத் திறனாளி ரசிகருடன் நெகிழ்ச்சி

கிரிக்கெட்டையும் தாண்டி ரசிகர்கள் மற்றும் பொது மக்களால் தல தோனி ஏன் இவ்வளவு நேசிக்கப்படுகிறார் என்பதற்கு மற்றொரு உதராணமாக நெகிழ்ச்சிகர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

திருவனந்தபுரம்: கிரிக்கெட்டையும் தாண்டி ரசிகர்கள் மற்றும் பொது மக்களால் தல தோனி ஏன் இவ்வளவு நேசிக்கப்படுகிறார் என்பதற்கு மற்றொரு உதராணமாக நெகிழ்ச்சிகர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா வந்துள்ளது. அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்  9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

முன்னதாக, போட்டி தொடங்குவதற்கு முன மைதானத்திற்கு வந்த தோனி அங்கு தனக்காக காத்திருந்த இளம் மாற்றுத் திறனாளி ரசிகருடன் சிறிது நேரம் செலவழித்தார். தனது ஆஸ்தான நாயகனான தோனியை காண தனது சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த சிறுவனை சந்தித்த தோனி, அச்சிறுவனுடன் புகைப்படங்களை எடுத்து விட்டு, ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து செல்லாமல், இளம் மாற்றுத் திறனாளி சிறுவனான தனது ரசிகருடன் கலந்துரையாடி சிறிது நேரம் செலவழித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், தோனியின் கைகளில் அச்சிறுவன் முத்தமிடுவது போன்றும், சிறுவனின் தலையை தோனி கோதி விடுவது போன்றும் நெகிழ்ச்சிகரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரியமான நபராக அறியப்படுபவர் மகேந்திர சிங் தோனி. 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி உள்ளிட்டவைகளை வென்று சாதனை கேப்டனாக இருக்கும் தோனி, கிரிக்கெட் களத்தையும் தாண்டி அனைவராலும் நேசிக்கப்படும் நபராக இருப்பவர். அதற்கு மற்றொரு சான்றான இந்த நிகழ்வு அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.