கிரண் பேடி எச்சரிக்கையை மீறி சிஏஏ-வுக்கு எதிரான தீர்மானம்! – புதுச்சேரி அரசு அதிரடி

 

கிரண் பேடி எச்சரிக்கையை மீறி சிஏஏ-வுக்கு எதிரான தீர்மானம்! – புதுச்சேரி அரசு அதிரடி

கிரண் பேடி எச்சரிக்கையையும் மீறி புதுச்சேரி சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிரண் பேடி எச்சரிக்கையையும் மீறி புதுச்சேரி சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

narayanasamy

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டது. இதற்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கண்டனம் தெரிவித்திருந்தார். அப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் புதுச்சேரி சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன. பா.ஜ.க-வின் நியமன எம்.எல்.ஏ-க்கள் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

samy

காங்கிரஸ், தி.மு.க, சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவோடு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் புதுச்சேரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவு ஆகியவற்றை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

samy

பின்னர் இது குறித்து பேசிய நாராயணசாமி, “ஆட்சியை டிஸ்மிஸ் செய்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்” என்றார். கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இந்த வரிசையில் ஆறாவது மாநிலமாக புதுச்சேரி இணைந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இதுபோன்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க திட்டமிட்டு வருகிறது. ஆனால், இது பரிசீலனையில் இருப்பதாகவே சபாநாயகர் கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.