கிரண்பேடி விடுத்த சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி

 

கிரண்பேடி விடுத்த சவாலை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி விடுத்த சவாலை ஏற்று அவரை சந்தித்து முதல்வர் நாராயணசாமி பேசவுள்ளார்

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி விடுத்த சவாலை ஏற்று அவரை சந்தித்து முதல்வர் நாராயணசாமி பேசவுள்ளார்.

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்றதில் இருந்தே முதல்வர் நாராயணசாமிக்கும் கிரண் பேடிக்கும் இடையே அதிகார மோதல் போக்கு நிலவி வருகிறது. அரசு நிர்வாகத்திற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி ஆளுநர் மாளிகை அருகே முதலமைச்சர் நாராயணசாமி கறுப்பு சட்டை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது. அவரது போராட்டத்துக்கு திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், தில்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பொதுமக்கள் முன்னிலையில் விவாதம் நடத்த முதல்வர் நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு விடுத்தார். இதுகுறித்த கிரண்பேடி தனது ட்விட்டர் பதிவில்,’மரியாதைக்குரிய முதல்வர் மற்றும் அவர்களது அமைச்சர்கள் பொதுமக்கள் முன்னிலையில் விவாதம் நடத்துவதற்கு நேரம், காலம், இடத்தை குறிக்கலாம். அதனை மக்கள் நேரடியாக கேட்கும் வகையில், பிரச்னைகளை புரிந்துகொள்ளும் வகையில் இருக்க வேண்டும். தற்போதுவரை, ஆளுநர் அலுலகம் முழுவதும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது. மற்றும் ஏழைகளின் நீதிக்காக செயல்படுகிறது’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்த சவாலை ஏற்ற நாராயணசாமி அதற்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். புதுச்சேரி கடற்கரையில், காந்தி சிலை அருகே விவாதம் நடத்தலாம்’என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து, அவசர அவசரமாக புதுவைக்கு திரும்பிய கிரண்பேடி, நாராயணசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினாா். இதனைத் தொடா்ந்து நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறுகையில், ஆளுநா் கிரண்பேடி அனுப்பியிருந்த கடிதம் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவரை இன்று மாலை 6 மணிக்கு சந்திக்க உள்ளேன்.

இந்த சந்திப்பின் போது மாநில அமைச்சா்கள் உடன் இருப்பாா்கள். அதே போன்று மாநில தலைமைச் செயலாளா் மேலும் எந்தந்த துறைகளில் உள்ள பிரச்னைகள் குறித்து முறையிட்டுள்ளோமா அந்த துறைகளின் செயலாளா்கள், அதிகாரிகள் இந்த சந்திப்பின் போது உடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் பதில் கடிதம் அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்தார்.