கிணறு வெட்டுன ரசீதும்; தணிக்கை சான்று ரஜினியும்: நமது அம்மா நாளிதழ் விமர்சனம்

 

கிணறு வெட்டுன ரசீதும்; தணிக்கை சான்று ரஜினியும்: நமது அம்மா நாளிதழ் விமர்சனம்

சர்கார் திரைப்படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரஜினியை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது.

சென்னை: சர்கார் திரைப்படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரஜினியை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது.

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் கொந்தளிப்படைந்த அதிமுகவினர் சர்காருக்காக வைக்கப்பட்ட பேனர்களை கிழித்தெறிந்தனர். இதனையடுத்து சர்கார் மறு தணிக்கை செய்யப்பட்டு தற்போது திரையிடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சர்காருக்கு ஆதரவாக திரையுலகை சேர்ந்தவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பதிவிட்டு இருந்தார்.

rajini

இந்நிலையில் ரஜினியின் இந்த கருத்துக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்து கட்டுரை வெளியிட்டுள்ளது. கிணறு வெட்டுன ரசீதும்; தணிக்கை சான்று ரஜினியும் என வெளியாகியிருக்கும் அந்த கட்டுரையில், எல்லா சான்றிதழும் பெற்றுவிட்டது என்பதற்காக பல்லி விழுந்த ஒரு பானத்தை நாம் குடிக்க முடியுமா?.

தணிக்கைக் குழு சான்றிதழ்கள் வழங்கிவிட்டாலும் தவறான தகவல்களோடு அரசுக்கு எதிராக உள்நோக்கத்தோடு ஒரு மோசமான கருத்து சினிமா என்கிற தலையாய ஊடகத்தின் வழியே பரப்பப்பட்டால் அதனை தடுத்து நிறுத்தத்தானே வேண்டும்.

மேலும், இலவச திட்டங்கள் சமூக நோக்கத்திலானது என நீதிமன்றம் கூட தெரிவித்துள்ளது. இலவச திட்டங்களை இழிவுபடுத்துவதுபோல் படம் எடுத்துவிட்டு பின்னர் படம் எடுத்தவர்களே அதற்கு வரி விலக்குக்கோரி அரசிடம் விண்ணப்பிப்பது எந்தவிதத்தில் நியாயம்.

சரியான புரிதல் இல்லாமல் அரசாங்கத்திற்கே ஆலோசனை சொல்லி அலைகிற இயக்குனர் முருகதாசுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை கூறவேண்டும். தணிக்கைச் சான்றை சுட்டிக்காட்டி ஒரு தவறுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வக்காலத்து வாங்கலாமா என கேள்வி எழுப்பியுள்ளது.