காஷ்மீர் விவகாரம்….. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தை கூட்ட சவுதி மறுப்பு…. மீண்டும் பல்பு வாங்கிய பாகிஸ்தான்….

 

காஷ்மீர் விவகாரம்….. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தை கூட்ட சவுதி மறுப்பு…. மீண்டும் பல்பு வாங்கிய பாகிஸ்தான்….

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தை கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்த பாகிஸ்தானின் கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்தது.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் மொத்தம் 57 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இருப்பினும், முடிவுகள் எடுப்பதில் சவுதி அரேபியா உள்ளிட்ட சில அரபு நாடுகளின கையே ஓங்கி இருக்கும். இதனால் இந்த நாடுகளை மீறி எந்த தீர்மானம் அல்லது விவாதத்தை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கொண்டு வரவோ அல்லது நடத்தவோ முடியாது. 

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு அண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கிய முதல், இந்த விவகாரத்தை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் விவாதிக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டது. இருப்பினும் அவை எல்லாம் தோல்வியில்தான் முடிவடைந்தது. இந்நிலையில், மலேசியாவில் நடைபெறும் உச்ச மாநாட்டில் பங்கேற்க கூடாது என்ற சவுதியில் கட்டளை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதில் கலந்து கொள்ளவில்லை.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள்

இதனையடுத்து சவுதி தனது வெளியுறவுத்துறை அமைச்சரை பாகிஸ்தானுக்கு அனுப்பி நன்றி தெரிவித்தது. ஆனாலும், காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை சவுதி நிராகரித்து விட்டது. பாகிஸ்தான் கோரிக்கையை சவுதி நிராகரித்த தகவலை பாகிஸ்தானின் செய்திதாள் ஒன்று வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் மலேசியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இம்ரான் கான் பேட்டி ஒன்றில், இஸ்லாமிய ஒத்துழைப்பில் உள்ள 57 உறுப்பு நாடுகளும் காஷ்மீர் விவகாரத்தில் மவுனம் சாதிப்பது தொடர்பாக தனது விரக்தியை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.