காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துக்கு இடமில்லை….. ஐ.நா. பொது செயலாளருக்கு இந்தியா பதில்

 

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துக்கு இடமில்லை….. ஐ.நா. பொது செயலாளருக்கு இந்தியா பதில்

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துக்கு இடமில்லை என ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ கட்டெரசுக்கு இந்தியா பதில் கொடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) பொது செயலாளர் அன்டோனியே கட்டெரஸ் 4 நாள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். நேற்று பாகிஸ்தானில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷியுடன் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஜம்மு அண்டு காஷ்மீர் நிலவரம் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நிலவும் பதற்றம் குறித்து கவலை தெரிவித்தார். 

அன்டோனியோ கட்டெரஸ்

மேலும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண எனது நல்ல அலுவலகங்களை வழங்கியுள்ளதாகவும், தெற்கு ஆசியாவில் பாதுகாப்பு நிலவரம் குறித்து குரேஷியுடன் தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதாகவும், பிராந்திய மோதல்களுக்கு மத்தியஸ்தம் மற்றும் பேச்சுவார்த்தைதான் ஒரே தீர்வு என தெரிவித்தார். அன்டோனியோ கட்டெரசின் இந்த கருத்துக்கு மத்திய அரசு உடனடியாக பதிலடி கொடுத்தது.

ரவீஷ் குமார்

இந்தியாவின் வெளியுறவு விவகார துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் இது குறித்து கூறுகையில், இந்திய மக்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர நம்பகமான நிலையான மற்றும் தவிர்க்கமுடியாத நடவடிக்கைகளை எடுக்கும்படி பாகிஸ்தானை ஐ.நா. பொது செயலாளர் வலியுறுத்துவார் என நாங்கள் நம்புகிறோம். ஜம்மு அண்டு காஷ்மீர் இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது மற்றும் இருக்கும். பாகிஸ்தானால் சட்டவிரோதமாகவும் பலவந்தமாகவும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை விடுவிப்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை. எந்தவொரு பிரச்சினை இருந்தாலும் அது இருதரப்பும் விவாதிக்க கூடியது. காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துக்கு இடமில்லை என தெரிவித்தார்.