காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்……பா.ஜ.வுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆதரவு

 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்……பா.ஜ.வுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆதரவு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பா.ஜ. நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஆதரவு அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் சிறப்பு உரிமைகள் வழங்கி வந்த சட்டப்பிரிவு 35ஏ ஆகியவற்றை மத்திய அரசு நேற்று அதிரடியாக நீக்கியது. மேலும், காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன்களாக பிரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், இது தொடர்பாக 2019 ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அரசு வெற்றிகரமான நிறைவேற்றியது.

காஷ்மீர் பிரிவு

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு காங்கிரஸ் கட்சி வானத்துக்கும் பூமிக்கும் குதித்து வருகிறது. இந்நிலையில் அந்த கட்சியை சேர்ந்த உத்தர பிரதேச பெண் எம்.எல்.ஏ. ஒருவர் பா.ஜ.வின் முடிவுக்கு ஆதரவாக பேசி இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் காங்கிரஸ் சேர்ந்த பெண் எம்.எல்,ஏ. அதிதி சிங். 2017ம் ஆண்டில் நடைபெற்ற அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் ரேபரேலி தொகுதியில் அதிதி சிங் போட்டியிட்டு 90 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்தான் இப்போது சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

காஷ்மீரில் பாதுகாப்பு

அதிதி சிங் இது தொடர்பாக கூறுகையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு நான் ஆதரவு அளிக்கிறேன். வரலாற்று சிறப்புமிக்க இந்த முடிவை அரசியலாக்க கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், அந்த கட்சியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. ஒருவரை ஆதரவாக பேசியிருப்பது அந்த கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.