காஷ்மீரில் கொரோனா நோயாளிகளின் வீடுகளில் துணிந்து ஆட்டைய போட்ட திருடர்கள்…. தங்க நகை மாயம்

 

காஷ்மீரில் கொரோனா நோயாளிகளின் வீடுகளில் துணிந்து ஆட்டைய போட்ட திருடர்கள்…. தங்க நகை மாயம்

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கொரோனா நோயாளிகளின் வீடுகளில் திருடர்கள் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வடக்கு காஷ்மீரின் பாண்டிபோரா மாவட்டத்தில் சதர்கூர் பாலா பகுதியில் வெவ்வேறு குடும்பங்களை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் ஸ்ரீநகரில் உள்ள எஸ்.கே.ஐ.எம்.எஸ். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்களது இருவரின் குடும்பத்தினரையும் அரசு அதிகாரிகள் தனிமைப்படுத்துதல் இடத்தில் தனிமைப்படுத்தி உள்ளனர்.

திருடர்கள்

இதனால் அவர்களின் வீடுகளில் தற்சமயம் அந்த குடும்பங்களை சார்ந்தவர்கள் யாரும் இல்லை. இந்நிலையில் திருடர்கள் அவர்களது வீடுகளின் சன்னல் கதவுகளை உடைத்து தங்க நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை களவாடி சென்றனர். ஆளில்லாத அந்த வீடுகளின் வெளியே கிடந்த உடைக்கப்பட்ட சூட்கேஸ்கள் மற்றும் டிரங்குகள் கிடந்ததை அந்த பகுதி மக்கள் சிலர் பார்த்த பிறகே அந்த வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்தது தெரியவந்தது.

வீடுகளில் திருடர்கள் கைவரிசை

இதனையடுத்து அங்கு வந்த போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்தனர். தனிமைப்படுத்துதல் இடத்திலிருந்து அந்த குடும்பத்தினர் வந்த பிறகே திருட போன பொருட்களின் சரியான மதிப்பு தெரியும் என காவல்துறையினர் தெரிவித்தனர். அண்டை வீட்டார்கள் அல்லது அந்த பகுதியை சேர்ந்த குற்றவாளிகள்தான் இந்த திருட்டை அரங்கேற்றி இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.