காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை நீக்கினால்தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை- இம்ரான் கான் தகவல்

 

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை நீக்கினால்தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை- இம்ரான் கான் தகவல்

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை விலக்கினால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பாகிஸ்தான் இம்ரான் கான் தெரிவித்தார்.

கடந்த மாதம் 5ம் தேதி ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை கொடுத்து வந்த சிறப்பு சட்டப்பிரிவை (370) பிரதமர் நரேந்திர மோடி அரசு அதிரடியாக நீக்கியது. மேலும், அம்மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் நடவடிக்கை பாகிஸ்தானுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.

காஷ்மீர்

இதனால் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், மாலத்தீவில் நடைபெற்ற தெற்காசிய சபாநாயகர்கள் மாநாடு உள்ளிட்டவற்றில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது. ஆனால் எந்தவொரு நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கும் முயற்சியில் அந்நாடு ஈடுபட்டு கொண்டு இருக்கிறது.

ரேடியோ பாகிஸ்தான்

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை விலக்கினால் மட்டுமே இந்தியாவுடன்  காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரதமர் இம்ரான் கான் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதாக பிரதமர் இம்ரான் கான் நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளதாக ரேடியோ பாகிஸ்தான் தகவல் வெளியிட்டுள்ளது. இம்மாதம் 24ம் தேதி ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டம் தொடங்குகிறது.