காவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம் – அத்தியாயம் -6

 

காவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம் – அத்தியாயம் -6

குடகில் தொடங்கி பூம்புகார் வரை நீண்டு கிடக்கிறது காவிரியின் கதை. எல்லா வகை மனிதர்களும் உலவிய காவிரி இன்று கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது. இதற்கான காரணங்களோடு காவிரிக்கரை மனிதர்களின் கதைகளையும் சுமார் 736 கி.மீ தூரம் பயணித்து தேடி கோர்க்கிறது காவிரி எனும் இந்த சரடு. கைவிடப்பட்ட காவிரியின் வரலாறை ஆவணப்படுத்தும் முயற்சியாக டாப் தமிழ் நியூஸ் செய்தி நிறுவனம் “காவிரியின் இரண்டாயிரமாண்டு சரித்திரம்” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படமானது பல்வேறு அத்தியாயங்களாக வெளியாகி வருகிறது.

அத்தியாயம் 6:

சடங்கம்பாடி தரங்கம்பாடியான கதை

தமிழகத்தில் இன்றைக்கு சின்னஞ்சிறு கிராமமாக இருக்கும் பல ஊர்கள் பண்டைய காலத்தில் பெரு நகரங்களாக இருந்திருக்கின்றன. இன்றைய பல பெரு நகரங்கள் கடந்த 300 வருடத்திற்குள் உருவானவை. இதற்கு தரங்கம்பாடி ஒரு உதாரண கிராமம்!!

மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் பிராதான சாலையில் இருந்து இடதுபுறம் போனால்…எதிர்படுகிறது டேனிஷ்காரர்கள் கட்டிய பிரம்மாண்டமான நுழைவு வாயில். அங்கிருந்து 2 கிலோமீட்டர் போனால் தரங்கம்பாடி குலசேகர பாண்டியனின் 37-வது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று மண்ணீஸ்வரர் கோயிலில் இருக்கிறது. கி.பி. 1305-ஆம் ஆண்டு வைக்கப்பட்ட இந்த கல்வெட்டு தரங்கம்பாடியை சடங்கம்பாடி என்று குறிப்பிடுகிறது.

‘சடங்கம்பாடியான குலசேகரன் பட்டினத்து உடையார் மண்ணீஸ்வர முடையாருக்கு’ என்கிறது கோயில் கல்வெட்டு.

இந்த கோயிலை அப்பர் பாடியிருப்பதால் இது குலசேகரன் காலத்திற்கு முந்தையாக இருக்க வேண்டும். 1614-ஆம் வருட கல்வெட்டும் இந்த ஊரின் பெயரை சடங்கன்பாடி என்றே குறிப்பிடுகிறது. தரங்கம்பாடி, பாக்கு வணிகத்தின் மையமாக இருந்திருக்கின்றது.

‘பாக்கு சுவந்திரம்’ என்ற பெயரில் அரண்மனைக்கு இலவசமாக பாக்கு கொடுத்திருக்கிறார்கள் ‘பதினென் விஷயம்’ என்ற வணிக குழுவினர். பாக்கு எண்ணிக்கையை சொல்ல அவனம் அலல்து அமணம் என்கிற சொல் வழக்கத்தில் இருந்திருக்கிறது.

இருபதாயிரம் கொட்டைப் பாக்குகள் கொண்டது ஒரு அமணம். சீனா, ஜப்பான், டேனிஷ், இங்கிலாந்து, டட்ச், போர்சுகல் ரஷ்யா போன்ற பன்னாட்டு நாணயங்கள் தரங்கம்பாடி அகழ்வாய்வில் தற்போது கிடைக்கின்றன. தரங்கம் என்கிற வடமொழி சொல்லுக்கு ‘அலை’ என்று பொருள்.

அந்த அலைகள் கடற்கரையில் இருக்கும் மாசிலாமணிநாதர் கோயில் படிக்கட்டுகளில் இடையறாமல் மோதி பாடுவதால் தரங்கம்பாடி என்று பெயரிட்டார்கள் தமிழர்கள். அந்த மாசிலாமணிநாதர் கோயிலை அலைகள் கொஞ்சம், கொஞ்சமாக தகர்த்துவிட்டதால், இப்போது மறுபடியும் புதிதாக கட்டியிருக்கிறார்கள். ஆனால், வழிபாடுகள் எதுவும் நடப்பதாக தெரியவில்லை. மாசிலாமணிநாதர் தவிர வேறு ஆள் நடமாட்டமே இல்லாத சின்னஞ்சிறு மீனவ கிராமமாகிப் போன தரங்கம்பாடிக்கு பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வந்த போர்ச்சுக்கீசியர்களும், பின்னால் வந்த டேனிஷ்காரர்களும் மறுபடி தரங்கம்பாடிக்கு புத்துயிர் கொடுத்தார்கள்.

தொடரும்….

நாலாயிரம் ரூபாய்க்கு விலை போன தரங்கம்பாடி