காவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம்-அத்தியாயம்-5

 

காவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம்-அத்தியாயம்-5

மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் பொன்னி எனும் காவிரி ஆறு இன்று கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது.

இதற்கான காரணங்களோடு காவிரிக்கரை மனிதர்களின் கதைகளையும் சுமார் 736 கி.மீ தூரம் பயணித்து தேடி கோர்க்கிறது காவிரி எனும் இந்த சரடு. கைவிடப்பட்ட காவிரியின் வரலாறை ஆவணப்படுத்தும் முயற்சியாக டாப் தமிழ் நியூஸ் செய்தி நிறுவனம் “காவிரியின் இரண்டாயிரமாண்டு சரித்திரம்” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படமானது பல்வேறு அத்தியாயங்களாக வெளியாகி வருகிறது.

 

அத்தியாயம் – 5 :

திசை மாறிய காவிரி!! எழுத்தாளர் கல்கியின் பார்வையில்…

காவிரி மூன்று முறை திசை மாறியிருக்கிறாள் என்று புவியியல் ஆய்வுகள் சொல்கின்றன. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு காவிரி சென்னைக்கு வடக்கே இருக்கும் பழவேற்காட்டில் கடலில் கலந்து இருக்கிறது. இந்த பகுதியை அடுத்து இருக்கும் ஆந்திர மக்கள் இப்போதும் ப்ரளய காவிரி என்றே அழைக்கிறார்கள். அதன் பிறகு இரண்டாவதாக திசை மாறி இன்றைய பிச்சாவரத்தில் கடலுடன் கலந்து இருக்கிறது. மூன்றாவது முறை திசை மாறிய பிறகுதான் இன்றைய பூம்புகாரில் சங்கமம் ஆகியிருக்கிறாள் காவிரி. மற்ற இரண்டும் மனித இனம் தோன்றும் முன் நடந்தவையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.இந்த புகாரில் சேரும் பொருட்டு பொங்கி வரும் காவிரியை எழுத்தாளர் கல்கி தனது ”பொன்னியின் செல்வன்” நாவலில் புகழ்வதை கேளுங்கள்.

குடகு நாட்டில் பிறந்து வளர்ந்த பொன்னி நதி கன்னிப் பருவம் கடந்ததும் தனது மணாளனாகிய சமுத்திர ராஜனிடம் சென்று அடைய விரும்பினாள். காடும், மேடும் கடந்து பாறைகளையும் பள்ளங்களையும் தாண்டிக்கொண்டு விரைந்து சென்றாள். சமுத்திர ராஜனை நெருங்க நெருங்க நாயகனை காணப்போகிறோம் என்ற குதூகலத்தினால் அவள் உள்ளம் விம்மி உடல் பூரித்தது. இன்னும் சற்று தூரம் சென்றால் காதலனை அணைத்துக்கொள்ள கரங்கள் இரண்டாகின. இரு கரங்களை விரித்தவாறு தாவி பாய்ந்து சென்றாள். ஆனால் உள்ளத்தில் பொங்கிய ஆர்வ மிகுதிக்கு இரு கரங்கள் போதும் என்று தோன்றவில்லை. அவளுடைய ஆசை கரங்கள் 10,20,100 என்று வளர்ந்தன. அவ்வளவு கரங்களையும் ஆவலுடன் நீட்டிக்கொண்டு சமுத்திர ராஜனை அணுகினாள்.

இவ்விதம் ஆசை கணவனை அடைவதற்கு சென்ற மணப்பெண்ணுக்கு சோழ நாட்டு செவுளித்தாய்மார் செய்த அலங்காரங்கள்தான் என்ன? அடடா!! எத்தனை அழகிய பச்சை புடவைகளை உடுத்தினார்கள். எப்படி எல்லாம் வண்ண மலர்களை சூட்டினார்கள்? எவ்விதமெல்லாம் பரிமல சுகந்தங்களை தூவினார்கள். ஆஹா இரு கரையிலும் வளர்ந்திருந்த புன்னை மரங்களும், கடம்ப மரங்களும், ரத்தின பூக்களையும் வாரி சொறிந்த அருமையை எவ்விதம் வர்ணிப்பது?

தேவர்கள் பொழியும் பூமாரியும் இதற்கு இணையாகுமா? பொன்னி நதியே உன்னை பார்த்து களிப்படையாத கன்னி பெண் யார்தான் இருக்க முடியும்? உன் மணக்கோல ஆடை அலங்காரங்களை கண்டு உள்ளம் பொங்காத மங்கை, யார் இருக்க முடியும்? கல்யாண பெண்ணை சுற்றி ஊரில் உள்ள கன்னி பெண்கள் எல்லோரும் சூழ்ந்து கொள்வது போல் உன்னை நாடி பெண்கள் வந்து கூடுவதும் இயற்கையே அல்லவா? பொன்னி தன் மணாளனை தழுவி கொள்ள ஆசையுடன் நீட்டும் பொற்கரங்களின் ஒன்றுக்குத்தான் அரசலாறு என்று பெயர். காவிரிக்கு தென் புறத்தில் மிக நெருக்கத்தில் அரசலாறு என்னும் அழகிய நதி அமைந்து இருக்கிறது. அப்படி ஒரு நதி இருப்பது சற்று தூரத்தில் இருந்து வருகிறவர்களுக்கு சொல்லித்தான் தெரிய வேண்டும்.

இரு புறமும் அடர்த்தியாக வளர்ந்து இருக்கும் இனிய பசு மரங்கள் அப்படி அந்த நதியை மறைத்துவிடுகின்றன. பிறந்தது முதலாவது அந்தப்புரத்தை விட்டு வெளியேறி அறியாத அரச குல கன்னி என்றே அரசலாற்றை சொல்லலாம். அந்த கன்னி நதியின் அழகுக்கு இந்த உலகில் உவமையே கிடையாது. இப்படி கல்கியால் வர்ணிக்கப்பட்ட காவிரியின் 100 கரங்களும் இன்று வறண்டு உலர்ந்து கிடக்கின்றன.

தொடரும்…

சடங்கம்பாடி…தரங்கம்பாடியான கதை…