காவிரி தாயை காக்க வேண்டியது நம் பொறுப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்

 

காவிரி தாயை காக்க வேண்டியது நம் பொறுப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்

திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

சென்னை: திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

மேகதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பான ஆய்விற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியிருந்தது. ஒருவேளை, மேகதாட்டுவில் கர்நாடகா அணை கட்டிவிட்டால் காவிரி டெல்டா மாவட்டங்கள் கடும் வறட்சியை சந்திக்கும் நிலை ஏற்படும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், திருச்சியில் நேற்று மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்த அந்த ஆர்ப்பாட்டத்தில், திக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “காவிரி என்பது வெறும் ஆறு அல்ல; நம் தமிழ்நாட்டுக்குத் தாய். தாயை காக்க வேண்டியது நம் பொறுப்பு. மாநில அரசை மட்டுமல்ல, மத்திய அரசையும் மிரள வைத்த நேற்றைய திருச்சி கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்த அனைவருக்கும் நன்றி. திருச்சியில் தொடங்கியது திக்கெட்டும் பரவட்டும்!” என பதிவிட்டுள்ளார்.