காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்க உளவியல் கலந்தாய்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!

 

காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்க உளவியல் கலந்தாய்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!

காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்க உளவியல் கலந்தாய்வு, பொழுதுபோக்குகள், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்க உளவியல் கலந்தாய்வு, பொழுதுபோக்குகள், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர் ஒருவர், தனது பிறந்த நாளன்று துப்பாக்கியால் தன்னைதானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பாமக நிறுவன ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 

police

சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள தமிழகக் காவல்துறையின் சிறப்புக் காவல்படை தலைமை அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மணிகண்டன் என்ற இரண்டாம் நிலைக் காவலர் இன்று காலையில் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் வெளியகரம் கிராமத்தைச் சேர்ந்த காவலர் மணிகண்டன்  கடுமையான பணிச்சுமையால் பாதிக்கப்பட்டிருந்தது தான் அவரது இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இன்று தமது 26-ஆவது பிறந்த நாள் என்பதால் விடுப்பு கோரி விண்ணப்பித்திருக்கிறார். ஆனால், அவருக்கு விடுப்பு மறுக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை பணியிலிருந்த நிலையிலேயே பிறந்தநாளைக் கொண்டாடிய மணிகண்டன் அடுத்த சிறிது நேரத்தில் தம்மிடமிருந்த துப்பாக்கியால் நெற்றிப் பொட்டில் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வழக்கம்போலவே அவரது முடிவுக்கு  வேறு காரணங்கள் கற்பிக்கப்பட்டாலும் பணிச்சுமையும், மனச்சுமையும் தான் உண்மையான காரணங்கள்.

மக்களைக் காக்கும் பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தாலும், அவர்களின் நிலை சபிக்கப்பட்டதாகவே உள்ளது. வரையறுக்கப்பட்ட பணி நேரம் இல்லாமையாலும், இடைவேளையின்றி நீண்ட நேரம் பணியாற்ற வேண்டியிருப்பதாலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடிவதில்லை. பல காவலர்கள் பணி நிமித்தமாக குடும்பத்தினரை பிரிந்து வேறு ஊரில் வாழ வேண்டியிருக்கிறது. பணியிடத்தில் பல நேரங்களில் உயரதிகாரிகளால் இழைக்கப்படும் அவமானங்களும் அவர்களை பாதிக்கின்றன. இதனால் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகும் காவலர்கள் மனம் எந்த நேரமும் கொதிநிலையிலேயே  உள்ளது. ஏதேனும் சிறிய அளவில் விரக்தி ஏற்பட்டால் கூட அவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் மட்டும் 211 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2012-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 51 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களில் பலர் தங்களிடமிருந்த துப்பாக்கியால் சுட்டு தான் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், ஆயுதப்படைக் காவலர் அருண்ராஜ் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர். மே மாதத்தில் நீலாங்கரையில் காவலர் பாலமுருகன் தூக்கிட்டு  தற்கொலை என காவல்துறையினரின் சோகக்கதைகள் நீளுகின்றன. அதுமட்டுமின்றி. கடந்த பத்து ஆண்டுகளில் 8158 காவலர்கள் பணியிலிருந்து விலகியுள்ளனர். இவை அனைத்துக்கும் காரணம், காவலர்கள் மனிதர்களாகக் கூட மதிக்கப்படாமல் அடிமைகளைப் போன்று நடத்தப்படுவதும், அதன் காரணமாக அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலும் தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிவுரைப்படி 222 பேருக்கு ஒரு காவலர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் 632 பேருக்கு ஒரு காவலர் தான் உள்ளார். அதாவது 3 காவலர்கள் செய்ய வேண்டிய பணியை ஒரு காவலர் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் நியமிக்கப்பட்ட பணியிடங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதால் காவலர்களின் பணிச்சுமை மேலும் அதிகரிக்கிறது. தமிழகக் காவல்துறையினர் மிகக் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்திருந்தும் அதைக் களைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குறைந்தபட்சம் காவலர்களுக்கு வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை அளித்து அவர்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக இருக்க அனுமதித்தாலே அவர்களின் மன அழுத்தம் குறைந்து விடும். ஆனால், காவல்துறை உயரதிகாரிகள் அவ்வாறு செய்வதில்லை. ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில்  பிறந்தநாள், திருமணநாள் ஆகியவற்றுக்காக காவலர்களுக்கு விடுமுறை அளிக்கும் வழக்கம் உள்ளது. இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் நீட்டிக்கப்பட்டால் காவலர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

காவலர்களிடையே நிலவும் மனஅழுத்தத்தைப் போக்கி அவர்களின் வாழ்க்கையை மகிழ்வாக்குவது அரசின் கடமை ஆகும். எனவே, காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்க உளவியல் கலந்தாய்வு, பொழுதுபோக்குகள், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை, அரசு ஊழியர்கள் – காவலர்கள் இடையிலான ஊதிய முரண்பாட்டைக் களைதல், ஏழு ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு, காவலராக பணியில் சேருபவர்கள் ஓய்வுபெறும் போது ஆய்வாளராக பதவி உயர்வு பெறுவதை உறுதி செய்தல், அனைத்து மாவட்டங்களிலும் காவலர் நல அமைப்புகளை ஏற்படுத்துதல், பல்வேறு படிகளை உயர்த்துதல் உள்ளிட்ட காவலர் நலத் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.