காளையை தெறிக்க விட்ட கரடி! ஏமாற்றம் கொடுத்த பங்கு வர்த்தகம்

 

காளையை தெறிக்க விட்ட கரடி! ஏமாற்றம் கொடுத்த பங்கு வர்த்தகம்

இந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் பின்னடைவை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.65 சதவீதம் வீழ்ந்தது.

இந்த வாரம் பங்குச் சந்தைகள் சறுக்கியதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவது அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் 28 பொருட்கள் மீதான இறக்குமதி வரியை இந்தியா உயர்த்தியது. இதற்கு அமெரிக்கா அடுத்து என்ன செய்யுமோ என்ற சின்ன பயம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்தது.

சென்செக்ஸ்

அடுத்து என்ன காரணம்ன்னு பார்த்தா, பருவமழை நிலவரம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையிலான பிரச்சனையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் ஏற்றம் கண்டு வருகிறது. மேலும் சில பங்குகளின் விலை உயர்ந்து இருந்தால் முதலீட்டாளர்கள் அந்த பங்குகளை விற்பனை செய்தனர். இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.65 சதவீதம் குறைந்து 39,194 புள்ளிகளில் முடிவுற்றது. முந்தைய வாரம் வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 39,452 புள்ளிகளில் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 0.84 சதவீதம் குறைந்து 11,724 புள்ளிகளில் நிலைகொண்டது. கடந்த 14ம் தேதி வர்த்தகத்தின் முடிவில் நிப்டி 11,823 புள்ளிகளில் நிலை கொண்டு இருந்தது.

பங்கு வர்த்தகம்

இந்த வாரத்தில் பங்குச் சந்தைகளில் வர்த்தக நிலவரம் சிறிது கவலைக்குரியதாக இருந்தாலும், டைட்டன் கம்பெனி, பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ் டி.சி.எஸ்., எஸ்.ஆர்.எப். உள்பட சில நிறுவனங்களின் பங்கு விலை புதிய உச்சத்தை எட்டியது. அதேசமயம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் பவர் உள்பட சில நிறுவனங்களின் பங்கு விலை இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்தது.