காளையின் வெற்றி தொடருமா? பங்குச் சந்தை நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

 

காளையின் வெற்றி தொடருமா? பங்குச் சந்தை நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வாரம் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும் என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் கோடக் மகிந்திரா வங்கி, பஜாஜ் ஆட்டோ, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் ஐ.டி.சி. உள்பட பல முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் வெளிவர உள்ளது. நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளை பொறுத்து பங்குச் சந்தை வினையாற்றும்.

பிரெக்ஸிட்

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து  விரைவாக வெளியேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும் தாமதமாகும் என தெரிகிறது. நேற்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்த முடிவை மேலும் தாமதப்படுத்த வேண்டும் என பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஆதரவு வாக்களித்தனர். தற்போதைய பிரெக்ஸிட் நிலவரம் இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாய் மதிப்பு

இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது தொடர்பான அன்னிய முதலீட்டாளர்களின் நிலைப்பாடு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை நிலவரம், இதர சர்வதேச நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்றவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.