காளைக்கும் வெற்றி! கரடிக்கும் வெற்றி! இதுதாங்க இன்றைய பங்கு வர்த்தக நிலவரம்

 

காளைக்கும் வெற்றி! கரடிக்கும் வெற்றி! இதுதாங்க இன்றைய பங்கு வர்த்தக நிலவரம்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மந்தகதியில் இருந்தது. சென்செக்ஸ் 8 புள்ளிகள் உயர்ந்தது. அதேசமயம் நிப்டி 8 புள்ளிகள் சரிந்தது.

செப்டம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு கண்டது, கடந்த நவம்பரில் வாகன விற்பனை மந்தகதியில் இருந்தது, இந்த நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை தற்போது கிரிசில் நிறுவனம் குறைத்துள்ளது இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுமாராக இருந்தது.

ஏர்டெல்
சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக்மகிந்திரா வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. யெஸ் பேங்க், பஜாஜ் பைனான்ஸ், ஓ.என்.ஜி.சி. மற்றும் சன்பார்மா உள்பட 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

யெஸ் பேங்க்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,050 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,501 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 190 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டிலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.37 லட்சம் கோடியாக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 8.36 புள்ளிகள் உயர்ந்து 40,802.17 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 7.85 புள்ளிகள் குறைந்து 12,048.20 புள்ளிகளில் முடிவுற்றது.