காளி கதாபாத்திரம் நடிகர் ரஜினியை பேட்டை வரை பின் தொடர்கிறது என்றால் எத்தனை வலிமையான கதாபாத்திரம்! இயக்குநர் வசந்த பாலன் நெகிழ்ச்சி !

 

காளி கதாபாத்திரம் நடிகர் ரஜினியை பேட்டை வரை பின் தொடர்கிறது என்றால் எத்தனை வலிமையான கதாபாத்திரம்! இயக்குநர் வசந்த பாலன் நெகிழ்ச்சி !

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவையொட்டி இயக்குநர் வசந்த பாலன் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவையொட்டி இயக்குநர் வசந்த பாலன் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

1978-ஆம் ஆண்டு வெளியான ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் மகேந்திரன். ஜானி, கை கொடுக்கும் கை போன்ற திரைப்படங்களை ரஜினியை வைத்து இயக்கினார். ரஜினி ஸ்டைலாக இருப்பதில் மகேந்திரன் பங்கும் அதிகம். 

இவரது படங்கள் பல்வேறு இளம் இயக்குநர்களுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. சினிமாவில் பல சாதனை படைத்த இவர் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். 

இந்நிலையில் இயக்குநர் மகேந்திரன் மறைவையொட்டி திரைத்துறையினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குநர்களுள் ஒருவரான வசந்த பாலன் தனது முகநூல் வாயிலாக பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில், ‘சமரசமில்லாத கலைஞன் இயக்குநர் மகேந்திரன். தன் படைப்புகள் மட்டும் பேசப்பட்டால் போதும் என்று ஆர்ப்பாட்டமில்லாமல் சுயபெருமை பேசாமல், அவர் படங்களில் காணக்கிடைக்கும் அமைதியை போல வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். அவரிடம் இருக்கும் நிதானம், அர்த்தமிக்க அமைதி, முதிர்ச்சி அவரது படங்களில் பிரதிபலிக்கும். அவர் இழுத்து சென்ற தேர் அதே இடத்தில் அதன் தரிசனம் குறையாமல் ஒளிவீசியவண்ணம் இருக்கிறது.

mahendran

தங்கப்பதக்கம் திரைப்படம் அதன் வசனத்திற்காகவும் உரத்த கதைகூறலுக்காகவும் நினைவு கூறப்பட்ட திரைப்படம்.அந்த திரைப்படத்திற்குக் கதை வசனம் எழுதிய மகேந்திரனின் திறமையைப் பாராட்டி அவருக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மிக குறைவான வசனங்கள் உள்ள, திரைமொழிக்கு முக்கியத்துவமுள்ள முள்ளும் மலரும் திரைப்படத்தை இயக்குகிறார். அங்கு தான் அவரின் கலைத்தன்மை மேலெழுந்து நிற்கிறது.

இன்றும் அவர் படங்கள் அதன் ஸ்திரத்தன்மையை இழக்காமல் காலத்தை எதிர்த்து நிற்கின்றன.காளி என்கிற கதாபாத்திரம் நடிகர் ரஜினி அவர்களைப் பேட்டை வரை பின் தொடர்கிறது என்றால் எத்தனை வலிமையான கதாபாத்திர வடிவமைப்பு.கதாசிரியராக இயக்குநராக அவரின் படங்கள் காலம் மூர்க்கமாக வீசுகிற அலைகளுக்கு முன் துருவேறாமல் அப்படியே நிற்கின்றன. ஒரு கலைஞனின் இடையறாத ஆசையும் கனவு அது தானே.தன் கனவு மெய்ப்பட்டதைக் கண்ட கலைஞன்.நிறைவான பயணம்.சென்று வாருங்கள் சார்’ என்று பதிவு செய்துள்ளார். 
 

இதையும் படிங்க: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மகேந்திரன் காலமானார்!