கால் டாக்சி ஓட்டுனர் தற்கொலைக்கு போலீசார் தான் காரணம்: விசாரணை அறிக்கையில் தகவல்

 

கால் டாக்சி ஓட்டுனர் தற்கொலைக்கு போலீசார் தான் காரணம்: விசாரணை அறிக்கையில் தகவல்

கால்டாக்சி ஓட்டுனர் தற்கொலைக்கு போலீசார் தான் காரணம் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை: கால்டாக்சி ஓட்டுனர் தற்கொலைக்கு போலீசார் தான் காரணம் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ராஜேஷ், சென்னையில் கால்டாக்சி ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த கடந்த மாதம் 25-ம் தேதி மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், தற்கொலை செய்து கொள்ளும் முன் அவர் வெளியிட்ட வீடியோ சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.

அதில், கடந்த மாதம் 25ம் தேதி காலை சுமார் 8 மணியளவில் டிஎல்எப் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை தனது காரில் ஏற்றிச் சென்றதாகவும், மற்றொரு ஊழியரை காரில் ஏற்ற அண்ணாநகர் பாடி மேம்பாலம் அருகே காரை நிறுத்திய போது, அங்கு வந்த போலீசார், தன்னை தகாத வார்த்தைகளில் திட்டி, காரையும் சேதப்படுத்திய காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்ததுடன், ரயில் முன்பு பாய்ந்து தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜய குமாரிக்கு உத்தரவிடப்பட்டது. இதை அடுத்து அண்ணா நகர் மற்றும் திருமங்கலம் போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றுவோர் உள்ளிட்ட 68 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த அறிக்கையானது சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜேசை திட்டிய இரு போக்குவரத்து போலீசாரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. ராஜேஷ் கூறிய அனைத்தும் உண்மை எனவும், போக்குவரத்து போலீசார் மீதே தவறு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.