கால்நடையாக சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு உதவுங்கள்! – பிரியங்கா காந்தி உருக்கம்

 

கால்நடையாக சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு உதவுங்கள்! – பிரியங்கா காந்தி உருக்கம்

டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களிலிருந்து கிராமங்களை நோக்கி மக்கள் கால்நடையாக செல்வதைத் தவிர்க்க மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத், டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களில் தங்கியிருந்த தொழிலாளர்கள் 21 நாள் ஊரடங்கு காரணமாக வாழ வழியின்றி தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர். பஸ், ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பசி கொடுமை காரணமாக நடந்தே சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர். அவர்களை ஆங்காங்கே போலீசார் தாக்கி வருவதும் நடக்கிறது. சில இடங்களில் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்குதலையும் போலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.

சென்னையில் தங்கியுள்ள வெளிமாநில கூலித் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் உணவு வழங்கப்படுகிறது. ஆங்காங்கே தன்னார்வலர்கள் உணவு தயாரித்து விநியோகித்து வருகின்றனர். டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதுபோன்று நடவடிக்கைகள் பெரிய அளவில் நடைபெறவில்லை.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், டெல்லியின் எல்லைப் பகுதிகளில் மிக மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் உணவு இன்மை காரணமாக தங்கள் வசிப்பிடத்தைவிட்டு வெளியேறி வருகின்றனர். கொரோனா பீதி, வேலையின்மை மற்றும் பசி ஆகியவை அவர்களை தங்கள் சொந்த கிராமங்களை நோக்கி கால்நடையாக நடக்கத் தூண்டியுள்ளது. அவர்களுக்கு உதவும்படி அரசாங்கத்தை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக சொந்த ஊருக்குத் திரும்பும் மக்களுக்கு உ.பி அரசு உணவு, இரவு தங்க இருப்பிட வசதி, சொந்த ஊருக்கு சென்ற பிறகு அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவற்றை உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.