காற்றைச் சுத்திகரிக்கும் செடிகள், மரங்கள்!

 

காற்றைச் சுத்திகரிக்கும் செடிகள், மரங்கள்!

காற்று… மனிதர்களுக்கு அவசியம். அது சுத்தமாக இருக்கவேண்டும். காற்று மாசுபட்டால் நோய்கள் எளிதாக தொற்றிக்கொள்ளும். எனவே, நாம் சுவாசிக்கும் காற்று விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். இதுகுறித்து மூலிகை ஆராய்ச்சியாளர் தமிழ்க்குமரனிடம் கேட்டோம். நம்மிடம் பேசினார்.

காற்றைச் சுத்திகரிக்கும் செடிகள், மரங்கள்!

புங்கை:
உலக அளவில் நோய் பாதிப்பைவிட நிலம், நீர், காற்று மாசு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் சீரமைப்பு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஆகவே, இதுகுறித்து அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. நம் முன்னோர் வீடுகளைச் சுற்றிலும், தெருக்களிலும், பொது இடங்களிலும் மரங்களை நட்டு வைத்தார்கள். அந்தவகையில் புங்கை மரம் சிறந்த காற்று சுத்திகரிப்பானாகச் செயல்படும். தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் மீதைல் ஐசோ சயனைடை உறிஞ்சிக்கொண்டு மனிதர்களை வாழ வைக்கக்கூடியது புங்கை.

நெட்டிலிங்கம்:
நெட்டிலிங்கம் மரம் தூசி, ஒலி, ஒளியைத் தடுத்து அரண் போன்று செயல்படும். வீடு அல்லது அலுவலகப் பகுதியில் நெட்டிலிங்கம் மரத்தை நடுவதால் அப்பகுதிக்கு அழகு சேர்க்கவும் உதவும் என்பதால் தாராளமாக நடலாம். இதேபோல் நாகலிங்கம் மரம் தூசியை வடிகட்டுவதுடன் நிழல் தரும் மரமாக இருப்பதுடன் சுற்றுப்புறத்துக்கு அழகூட்டும்.

காற்றைச் சுத்திகரிக்கும் செடிகள், மரங்கள்!நந்தியாவட்டம்:
மூக்குச்சளிப்பழ மரம் எனப்படும் நறுவிலி மரமும்கூட சிறந்த காற்றுத் தடுப்பானாகச் செயல்படும். குறு மரமான நந்தியாவட்டை எனப்படும் நந்தியாவட்டம் தூசியை உள்வாங்கிக்கொண்டு சிறந்த தடுப்பரணாகச் செயல்படும். இதில் பூக்கும் வெள்ளை நிற பூக்கள் கண் நோய்களுக்கு நல்மருந்தாகப் பயன்படுகிறது. இப்படி பல மரங்கள் தூசி தடுப்பானாகவும் காற்றுத் தடுப்பானாகவும் செயல்படுகிறது. எனவே, இவற்றை வீடுகள் தோறும், வீதிகள் தோறும் நட்டு நலம் காப்போம்.

கற்றாழை:
மரங்களைப்போலவே பல்வேறு செடிகளும் காற்று மாசுபடுவதைத் தடுப்பதில் பெரும்பங்காற்றுகின்றன. கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா இடங்களிலும் செழித்து வளரக்கூடியது கற்றாழை. இதன் மருத்துவக் குணம் தெரிந்தும், சிலர் தெரியாமலும் வீட்டின் முன்புறமும், உள்பகுதியிலும் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். பலர் வீட்டின் வெளியே தொட்டிகளிலோ அல்லது மண் தரையிலோ வளர்ப்பார்கள். கற்றாழைக்கு காற்றைச் சுத்திகரிக்கும் தன்மை உண்டு.

காற்றைச் சுத்திகரிக்கும் செடிகள், மரங்கள்!
மூங்கில்:
நாம் வசிக்கும் பகுதியில் காற்று மண்டலத்தில் காணப்படும் அனைத்துவகையான ரசாயனங்களையும் நீக்கும் பணியை மூங்கில் மிகச்சிறப்பாகச் செய்யும். இந்தச் செடிக்கு நேரடி சூரிய வெளிச்சம் தேவையில்லை என்பதால் நிழல் உள்ள இடங்களில்கூட மூங்கில் செடிகளை வளர்க்கலாம். வீட்டின் முன்வாசலில் தொடங்கி பாத்ரூம், படுக்கையறை என எல்லா இடங்களிலும் சிறிய செடியாக இதை வளர்க்கலாம்.

சாமந்திப்பூ:
சாமந்திப்பூச் செடியையும் வளர்க்கலாம். பார்க்க அழகாக இருக்கும் சாமந்திச் செடி காற்றை தூய்மைப்படுத்த உதவுகிறது. இந்தச் செடியை நேரடியாக வெயிலில் படாமல் மறைமுக சூரிய ஒளியின் கீழ் வைக்க வேண்டும். வெயில் படவில்லை என்பதற்காக கண்டுகொள்ளாமல் இருந்துவிடக்கூடாது. அவ்வப்போது செடியின் கீழ் உள்ள மண்ணில் ஈரப்பதம் உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். அடுத்தது ஸ்நேக் பிளான்ட் எனப்படும் பாம்புக் கற்றாழை. இது காற்றைச் சுத்திகரிக்கும் மிக முக்கியமான பணியைச் செய்வதாக நாசா விண்வெளி மையம்கூட தெரிவித்துள்ளது. அந்த அளவுக்கு இது காற்றைச் சுத்தப்படுத்துவதில் முக்கிய பணி செய்கிறது.

ஸ்பைடர் பிளான்ட்:
பாம்புக் கற்றாழையை வீட்டில் வளர்த்தால், அது வீட்டின் உள்ளே இருக்கும் காற்றில் கலந்திருக்கும் நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் பார்மால் டி ஹைடு போன்றவற்றை உறிஞ்சி சுத்தமான காற்றைத் தரும். இதேபோல் ஸ்பைடர் பிளான்ட் (Spider Plant) எனப்படும் செடி காற்றில் உள்ள புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்களை நீக்கும் பணியைச் செய்கிறது. வீட்டின் சுற்றுப்புறத்தில் உள்ள காற்றைத் தூய்மைப்படுத்தி, நல்ல தூக்கத்தைத் தரும்.

பாஸ்டன் பேர்ன் செடி வீட்டிலுள்ள ஈரப்பதத்தை வெளியேற்றி தூசியை நீக்கும். அதேபோல் வீடுகளில் அதிகமாக வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்று மணி பிளான்ட். கொடி வகையைச் சேர்ந்த இந்தத் தாவரம் வீடுகளில் உள்ள மரச்சாமான்களில் படிந்திருக்கும் வேதியியல் பொருள்களை அகற்றி மாசடைந்த காற்றை தூய்மைப்படுத்தும். பீஸ் லில்லி என்பது காடுகளில் வளரக்கூடிய பச்சைநிறத் தாவரமாகும். அழகான வெள்ளை நிறப் பூக்களைக் கொண்ட இந்தத் தாவரம் சிறந்த காற்று சுத்திகரிப்பானாகத் திகழும்.

இவை போன்று இன்னும் ஏராளமான செடிகளை வீட்டின் உள்ளே வளர்ப்பதால் நம் சுவாசம் சீராக இருப்பதுடன் மாசடைந்த காற்று சுத்திகரிக்கப்படும். இவற்றை வளர்ப்பதன்மூலம் ஆரோக்கியம் பேணலாம்.