கார் விபத்தில் மகனை காப்பாற்றிய தாய்; 27 ஆண்டுகளுக்கு பின் கோமாவில் இருந்து மீண்ட அதிசயம்!

 

கார் விபத்தில் மகனை காப்பாற்றிய தாய்; 27 ஆண்டுகளுக்கு பின் கோமாவில் இருந்து மீண்ட அதிசயம்!

பேருந்து ஒன்றின் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த விபத்தில் இருந்து தனது மகனை காப்பாற்ற முனிரா முனைந்த போது, அவரது மூளையில் காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார்

துபாய்: கார் விபத்தில் மகனை காப்பாற்றிய தாய் ஒருவர், 27 ஆண்டுகளுக்கு பின்னர் கோமாவில் இருந்து மீண்ட ஆதிசயம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அல்-ஐன் பகுதியை சேர்ந்தவர் முனிரா அப்துல்லா. இவர் தனது 32 வயதில் தனது நான்கு வயது மகனை பள்ளியில் இருந்து காரில் அழைத்து வந்த போது விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார். தனது உறவினர் ஒருவர் காரை ஓட்ட, முனிராவும் அவரது மகன் ஓமரும் காரின் பின் இருக்கையில் உட்கார்ந்து வந்துள்ளனர். அப்போது, பேருந்து ஒன்றின் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த விபத்தில் இருந்து தனது மகனை காப்பாற்ற முனிரா முனைந்த போது, அவரது மூளையில் காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

Accident

முதலில் லண்டனில் வைத்து முனிராவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உணர்வற்ற நிலையில் இருக்கும் முனிராவால் வலியை மட்டும் உணர முடியும் என கூறியுள்ளனர்.

அதன்பின்னர், ஐக்கிய அரபு அமீரகம் அழைத்து வந்து வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். அவரை உயிருடன் வைக்க குழாய் மூலம் உணவு கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இப்படியே ஆண்டுகள் ஓட, அபுதாபி பட்டத்து இளவரசருக்கு இது குறித்து தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அவர் முனிராவின் குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்க, ஜெர்மனியில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

abu dhabi prince

சுமார் ஓர் ஆண்டுகாலம் சிகிச்சைக்கு பின், வித்தியாசமான சில ஓசைகளை முனிரா எழுப்பியுள்ளார். இதையடுத்து, அடுத்த மூன்று நாட்களில் தனது மகனின் பெயரை ஓமர் என முதன்முதலாக 27 ஆண்டுகளுக்கு பின்னர் முனிரா அழைத்துள்ளார். இதுகுறித்து ஓமர் கூறுகையில், நான் மகிழ்ச்சியில் தற்போது பறக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நான் கண்ட கனவு பலித்த தருணம் இது. என்னுடைய பெயரை தான் அவர் முதன்முதலாக உச்சரித்தார் என மகிழ்ச்சி பெருக்கில் தெரிவித்துள்ளார். அத்துடன், அபுதாபி பட்டத்து இளவரசருக்கு முனிராவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தற்போது முனிராவால் தனக்கு நெருக்கமானவர்களிடம் சகஜமாக பேச முடிகிறது. தொழுகைகளை மேற்கொள்ள முடிகிறது. இருப்பினும், அவரது சதைகளை வலுப்படுத்த ஃபிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த 1991-ஆம் ஆண்டு கோமா நிலைக்கு சென்ற பெண் ஒருவர், 27 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டில் மீண்டு வந்த அதிசயம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதேபோல், கோமாவில் இருந்ததால், அந்த இடைப்பட்ட காலங்களில் உலகில் நடந்த, சோவியத் யூனியன் உடைந்தது, இளவரசி டயானா இறந்தது, இணையதள சேவை அறிமுகமானது, மைக்கல் ஜாக்சன் உயிரிழப்பு, ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது, அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்வானது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை முனிரா அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: ஆள் மாட்டுனா சாட்டையடியும், 20 ஆண்டு சிறையும் உறுதி?!