காரில் மட்டுமா? விமானத்தில் இருந்தும் ஆடுவோம்ல..: வைரலாகும் விமானிகளின் கிகி டான்ஸ்!

 

காரில் மட்டுமா? விமானத்தில் இருந்தும் ஆடுவோம்ல..: வைரலாகும் விமானிகளின் கிகி டான்ஸ்!

பெண் விமானிகள் இருவர் விமானத்தை இயக்கிவிட்டு, கீழிறங்கி கிகி டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் கிகி டான்ஸ் சேலஞ்ச் உலகம் முழுவதும் பிரபலமாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கனடா பாடகரின் ‘கிகி டூ யூ லவ் மீ? ஆர் யூ ரைடிங்’ என்ற பாடலுக்கு ஓடும் வாகனத்தில் (கார், ரயில், பைக்) இருந்து இறங்கி டான்ஸ் ஆட வேண்டும். இதனை வாகனத்தில் உள்ள மற்றொருவர் வீடியோ எடுப்பார். பாடல் முடிந்தவுடன் அதே வாகனத்தில் மீண்டும் ஏறிக் கொள்ள வேண்டும் என்பதே ‘கிகி டான்ஸ் சேலஞ்ச்’ ஆகும்.

இதுவரை கார், பைக், ரயில்களில் மட்டுமே கிகி சேலஞ்சை இளைஞர்கள் ஏற்று வந்த நிலையில், பெண் விமானிகள் இருவர், விமானத்தை இயக்கிவிட்டு அது மெல்ல நகரும் போது கீழே இறங்கி கிகி பாடலுக்கு டான்ஸ் ஆடுகின்றனர். யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தானாக இயங்கிய விமானம் அதிர்ஷ்டவசமாக எவ்வித விபத்திலும் சிக்கவில்லை. விமானிகளின் இந்த கிகி டான்ஸ் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது போன்ற ஆபத்தான விளையாட்டின் மூலம் விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்பு நேர்வதால், கிகி சேலஞ்சை யாரும் முயற்சிக்க வேண்டாம் எனவும், மீறினால் கைது நடவடிக்கை பாயும் எனவும் இந்தியா போன்ற நாடுகளில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விளையாட்டுப்போக்கில் விமானிகள் ஆடும் இந்த விபரீத கிகி டான்ஸ் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.