காரப்பன் யார்..? எந்த சாதி..? ஹெச்.ராஜாவால் கோவையில் மதம் தலைவிரித்தாடுகிறதா..?

 

காரப்பன் யார்..? எந்த சாதி..? ஹெச்.ராஜாவால் கோவையில் மதம் தலைவிரித்தாடுகிறதா..?

அன்று முஸ்லிம்கள் கடைகளில் இந்துக்கள் வியாபாரம் செய்யாதீர்கள் என்று வெறுப்பைப் பரப்பும் வேலையைச் செய்தார்கள்.

கோயமுத்தூர், திருப்பூரைப்  பொறுத்தவரையில் முதல் மரியாதை ஒருவருடைய உழைப்புக்குத்தான் தருவார்கள். நீ யார், என்ன பின்புலம், உன் குலம், கோத்திரம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். அதனால்தான் இங்கே எல்லோருக்கும் இடம் இருக்கிறது. இன்னும் எவ்வளவு பேர் வந்தாலும் வரவேற்கிறார்கள். 

இங்கே எல்லோருமே தமிழர்கள்தான். வீட்டில் தெலுங்கு பேசினாலும் கோயமுத்தூர், உடுமலைப்பேட்டை நாயக்கர்கள் பெரும்பாலோனோருக்குத்  தெலுங்கு எழுதப் படிக்க வராது. ஒக்கலிக கவுடர், குரும்ப கவுண்டர், தேவாங்கச் செட்டியார் என பல கன்னடம் பேசும் சாதியினர் இங்கு இருந்தாலும் அவர்களுக்கும் பெரும்பாலும் கன்னடம் எழுதப் படிக்க வராது. ஆனால் தமிழில் சரளமாக புழங்குவார்கள். கேரளத்தவரும் கணிசமான எண்ணிக்கையில் மலையாளி என்று சொல்லிக்கொண்டாலும், வீட்டில் மலையாளம் பேசினாலும் பெரும்பாலோனோருக்கு எழுதப் படிக்க வராது. அதனால் இங்கே எல்லோரும் தமிழர்கள்தான். தமிழ் தேசியம் குறித்து கோவையில் பேசினால் சிரிப்பார்கள். 

h raja

முஸ்லிம்களும், கிறித்தவர்களும்  கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். குறிப்பிடத்தக்க வியாபாரம் அவர்களிடமும் இருக்கிறது. எல்லோருக்குமான பள்ளி, கல்லூரிகளையும் நடத்துகிறார்கள். 

இங்கே போட்டி என்றால் தொழிலுக்குத் தொழில்தான் போட்டி. உற்பத்திச் செலவைக் குறைக்க, விற்பனையைக் கூட்ட, வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க என்னென்ன தெரியுமோ அத்தனை வழிமுறைகளையும் மேற்கொள்ளுவார்கள். ஆனால் தம் தொழிலுக்கு நேர்மையாக நடந்துகொள்வார்கள். ஒருபோதும் குறுக்குவழியில் பின்புறமாக ஒருவரை ஒருவர் தாக்க மாட்டார்கள். 

அரசியல் நிலைப்பாடுகள் வேறு, வியாபாரம் வேறு என்பது இங்கே அடிப்படை வாழ்க்கைமுறை. கோவையைப் பொறுத்தவரை ஒருவருடைய அரசியல் சித்தாந்த நிலைப்பாட்டைத் தனது தொழிலின் மீது திணித்துப் பாரத்ததே இல்லை. ஓர் இணக்கமான சூழலை, harmony-யைக் கெடுக்கும்வண்ணம் இங்குள்ள மக்கள் நடந்துகொள்வதில்லை. 

karappan

கடந்த ஒரு வார காலமாக சர்ச்சையில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் விவகாரம் கோயமுத்தூருக்கு முற்றிலும் புதியது.  பட்டு நூல் நெசவைக் கர்நாடகா வரைக்கும் சென்று கற்றுக் கொண்டுவந்து சிறுமுகையில் அறிமுகப்படுத்தியவரே காரப்பன்தான். அவரது வழியொற்றி பின்னால் வந்த குடும்பங்கள் எத்தனையோ. விஸ்கோஸ் ஆலை ஓகோவென்று இருந்த காலத்திலும் சரி, இன்றும் சரி, சிறுமுகைப் பட்டுத் துணிக்கு கோவை சுற்றுவட்டாரத்தில் நல்ல வரவேற்பு உண்டு. 

சிறுமுகைப் பட்டுத் துணி வியாபாரத்தில் இருக்கும் அத்தனை பேரும் தேவாங்கச் செட்டியார்கள். காரப்பன் மட்டுமே ஒக்கலிக கவுடர். ஆனால் இன்றுவரைக்கும் இந்த ஊரில் சாதி பார்த்து, மதம் பார்த்து யாரும் யாரையும் ஒரு வார்த்தை சொன்னதில்லை. அவரவர் வியாபாரம் அவரவருக்கு. 

முதன்முறையாக, இந்துக் கடவுளை அசிங்கமாகப் பேசினார் என்றும், அதனால் காரப்பன் சில்க்ஸ் துணிக்கடையில் இந்துக்கள் யாரும் வியாபாரம் செய்யாதீர்கள் என்றும் இந்து முன்னணி சார்பில் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. மூட்டைப்பூச்சி அளவுக்கு உள்ள இந்த ஊரில் இருக்கும் ஒருவரது கடையை பகிரங்கமாகக் குறிப்பிட்டு அதைப்  புறக்கணியுங்கள் என்று பாஜக தலைவர் எச். இராஜா நேரடியாக பதிவு போடுகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

கோவை வரலாற்றை பஞ்சாலை காலம் முதல் இன்றைய ஐ.டி. காலம் வரைக்கும் குறுக்கும் நெடுக்குமாகப் பார்த்தால் எல்லா சாதியினரும், எல்லா மதத்தினரும் எல்லாவிதமான அரசியல் சார்புகளையும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் தங்களது ஆதரவாளர்களைப் பார்த்து ”அவரைப் புறக்கணியுங்கள், இவரைப் புறக்கணியுங்கள்” என்ற தீண்டாமையை அறிமுகப்படுத்தவில்லை. 

அரசியல் தீண்டாமையை ஒருவரது வியாபாரத்தின் மீது காட்டி வெற்றி பெற்றுவிடலாம், ஊரை அடக்கி ஆளலாம் என்ற கற்பனை கடைசி வரைக்கும் தேர்தலில் டெபாசிட்டைக் கூட மீட்டுத் தராது.  பயத்தை உண்டாக்கி அரசியல் செய்ய இது பீகார், ஜார்க்கண்ட் அல்ல. 

அன்று முஸ்லிம்கள் கடைகளில் இந்துக்கள் வியாபாரம் செய்யாதீர்கள் என்று வெறுப்பைப் பரப்பும் வேலையைச் செய்தார்கள். இன்று இன்னும் கீழே இறங்கி காரப்பன் சில்க்ஸ் என்கிற கடையில் இந்துக்கள் வியாபாரம் செய்யாதீர்கள் என்று நவீன தீண்டாமையை அறிமுகப்படுத்துகிறார்கள்.  இவர்களுடைய நோக்கம் இந்து மதத்தைக் காப்பதன்று. இங்குள்ள ஒவ்வொருவரும், மதமாகவும், சாதியாகவும் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதே. 

காரப்பன் நாத்திகராக இருக்கலாம். ஆனால் கடையில் ஒரு பெரியார் படமோ, அம்பேத்கர் படமோ இல்லை. வரும் வாடிக்கையாளர் தனது அரசியல் நிலைப்பாட்டினால் சங்கடத்துக்கு உள்ளாகக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அதுதான் அவரது தொழிலுக்கு அவர் காட்டும் நேர்மை.

karappan

மற்றபடி கடைக்கு வெளியே ஒரு நபர்  என்ன பண்ணுகிறார், என்ன பேசுகிறார் என்று தணிக்கை செய்து ஸ்டார் ரேட்டிங் கொடுத்து இந்த கடையில் வாங்கு, இந்த கடையில் வாங்காதே என்று referral கொடுப்பதை இந்து முன்னணி அறிமுகப்படுத்தியிருப்பது வியாபாரிகளிடம் பணம் பறிக்க மட்டுமே. இஃது இந்து மதத்தையோ, பாஜக-வையோ தமிழகத்தில் நிச்சயமாக வளர்க்காது என்பது உறுதி. 

அவரது குடும்பத்தினர் பல கோவில்களுக்குப் புரவலராக உள்ளனர். கடையில் அத்தனை சாமி படங்களையும் மாட்டியிருக்கின்றனர். தினமும் சராசரி மக்களைப் போல பூஜை போட்டே வியாபாரத்தைத் தொடங்குகின்றனர்.  அந்த ஊரில், அந்தத் தொழிலில் 99 சதவீதம் இருக்கும் இந்து தேவாங்கச் செட்டியார்களால் காரப்பன் அவர்களின் தொழிலுக்கு அச்சுறுத்தல் இல்லை. ஆனால் எங்கிருந்தோ வந்தவர்கள் இந்து என்ற பெயரில் “நீ எப்படி கடை நடத்திடறேன்னு பாக்கறேன்” என்று மிரட்டுகிறார்கள் என்றால் அதைப் பார்த்துக் கொண்டு நாம் எல்லோரும் சும்மா இருக்க இது குஜராத்தும் அல்ல. 

ஒருவருடைய தொழிலை அவர்களது அரசியல் நிலைப்பாட்டுக்காக புறக்கணிக்கும் தீண்டாமையை அறிமுகப்படுத்துவது பாஜகவாக இருந்தாலும் சரி, திராவிடக் கட்சிகளாக இருந்தாலும் சரி, அதைக் கண்டிக்க வேண்டியது நமது கடமை. இங்கே ஒவ்வொருவரும் வாழ இடம் இருக்கிறது. அந்த இணக்கமான சூழலை அழித்துவிட்டு நம்மை பயத்தில் வைத்திருக்க நினைக்கும் கும்பல்களை ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது.