காமுகன் பார் நாகராஜ் வீடியோக்கள் வெளியானது; பொள்ளாச்சியில் போட்டியிட அஞ்சும் அ.தி.மு.க கூட்டணி கட்சிகள்!

 

காமுகன் பார் நாகராஜ் வீடியோக்கள் வெளியானது; பொள்ளாச்சியில் போட்டியிட அஞ்சும் அ.தி.மு.க கூட்டணி கட்சிகள்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ் பெண்கள் வன்கொடுமை செய்யும் மூன்று வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ் பெண்கள் வன்கொடுமை செய்யும் மூன்று வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுடன் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி, காதலிப்பதாக கூறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து அந்த பெண்களை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. இது தொடர்பான இரண்டு வீடியோக்கள் வெளிவந்தது. வீடியோவில் இருக்கும் பெண்ணின் கதறல் நெஞ்சை பதைபதைக்க வைத்தது.

pollachi

தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முதலில் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு, இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்புகள் உள்ளன. விரைவில் உண்மையைச் சொல்வேன் என வீடியோ வெளியிட்டது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களைத் தொடர்பு படுத்தி பேசப்படுவது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தன் குடும்பத்தினர் மீதான விமர்சனத்தை பொள்ளாச்சி ஜெயராமன் மறுத்திருக்கிறார்.

pollachijayaraman

ஆனால், இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சி தீவிரம் காட்டுவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். தவிர, மாநிலம் முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் புகார் கொடுத்த பெண்ணின் விவரத்தை காவல்துறை கசியவிட்டதால், அப்பெண்ணின் அண்ணனை, சிலர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக, செந்தில் (33), பாபு (26), வசந்தகுமார் (20), நாகராஜ் (26) ஆகிய நான்கு பேரைக் கைது செய்தது போலீஸ். இதில் நாகராஜ் பொள்ளாச்சி 34-வது வட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர். தாக்குதல் புகாரில் கைதான நான்கு பேருமே மூன்று நாள்களில் ஜாமீனில் வெளிவந்து விட்டனர்.

barnagaraj

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், நாகராஜ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இவரை கைது செய்து, தகுந்த வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, இவருக்கு சொந்தமான பாரை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

bar

இந்நிலையில், காமுகன் பார் நாகராஜ் பெண்கள் வன்கொடுமை செய்யும் மூன்று வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோக்களை கைது செய்யப்பட்டுள்ள இவரது கூட்டாளிகள் மறைந்திருந்து எடுத்துள்ளனர். அந்த வீடியோவில், இணங்க மறுத்த பெண்ணை மிரட்டுவது போன்றும், அடுத்த முறை அழைக்கும் போது வரவேண்டும் என அப்பெண்ணை அவர்கள் மிரட்டுவது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளது. தற்போது வீடியோ வெளியாகியுள்ளதால் பார் நாகராஜனை கைது செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

barnagaraj

அதேசமயம், எதிர்வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் அரசியல் கட்சிகளின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. அதிமுக-வின் கோட்டை “கொங்கு மண்டலம்” என்று அழைக்கப்படும் இந்த பகுதிக்குள் தான் பொள்ளாச்சி தொகுதியும் வருகிறது. இந்த தொகுதியின் எம்.பி.,-யாக இருப்பவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த மகேந்திரன்.

மக்களவை தேர்தலுக்காக அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஆளுங்கட்சிக்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் இந்த விவகாரத்தில் இக்கட்சிகள் தொடர் மவுனத்தையே தந்து வருகிறது. தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். எப்போதும் இதுபோன்ற விவகாரங்களில் காட்டமாக அறிக்கை விடும் பாமக, பட்டும்படாமல் அறிக்கை விட்டுள்ளது. இதையெல்லாம்  கவனிக்கும் தொகுதி மக்கள் ஒரே கூட்டணியில் இருக்கும் இக்கட்சிகள் மீது ஆதங்கத்தில் இருப்பதாகத் தகவல்கள்  வெளியாகின்றன.

செல்வாக்கு மிகுந்த தொகுதியாக இருந்தாலும், ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதால் பொள்ளாச்சி தொகுதியை பாஜக மற்றும் பாமக ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட அதிமுக முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம். சொந்த கட்சியை சேர்ந்தவர்கள் கூட தற்போது இருக்கும்  நிலையில், பின் வாங்குவதாக செய்திகள் வெளி வருகின்றன. எனவே, தொகுதி மக்களிடம் அதிருப்தியும், நல்ல அபிப்பிராயமும் இல்லாத சிட்டிங் எம்.பி.,-யான மகேந்திரனுக்கு மீண்டும் சீட் வழங்கப்படலாம் என தெரிகிறது.

dmkprotest

திமுக-வை பொறுத்தவரை தி.மு.க. நகர செயலாளர்  தென்றல் செல்வராஜ் சீட் கேட்டிருக்கிறார். ஸ்டாலினுக்கு நெருக்கமான இவர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். அதுவே அக்கட்சிக்கு பிரசாரங்களுக்கு போதுமானது. எனவே, அவருக்கு சீட் வழங்கப்படலாம் என தெரிகிறது.

பாலியல் விவகாரத்தில் மக்கள் கொதித்துப்போய் இருக்கும் நிலையில் தேர்தல் பற்றி பேசுவது சரியாக இருக்காது என ஒருமித்த குரலில் அரசியல் கட்சிகள் கூறி வருகின்றனர்.