காமதேனுவாக மாறிய பங்குச் சந்தை…. ரூ.4 லட்சம் கோடியை அள்ளிய முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 1,266 புள்ளிகள் உயர்ந்தது…

 

காமதேனுவாக மாறிய பங்குச் சந்தை…. ரூ.4 லட்சம் கோடியை அள்ளிய முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 1,266 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 1,266 புள்ளிகள் உயர்ந்தது.

கடந்த மார்ச் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவாக இருக்கும் என ராய்ட்டர்ஸ் கணிப்பில் கண்டறியப்பட்டுள்ளது. அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று இந்திய நிறுவன பங்குகளில் ரூ.1,943 கோடி முதலீடு செய்துள்ளனர். இது அவர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மீண்டும் முதலீடு செய்ய தொடங்கி இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் பல ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்ற நம்பிக்கை காரணமாக ஆசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இது போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றம் கண்டது.

மகிந்திரா அண்டு மகிந்திரா

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் மகிந்திரா அண்டு மகிந்திரா, மாருதி, ஹீரோமோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, எச்.டி.எப்.சி. நிறுவனம் மற்றும் டைட்டன் உள்பட 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இந்துஸ்தான் யூனிலீவர், டெக்மகிந்திரா மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட 4 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இந்துஸ்தான் யூனிலீவர்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,853 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 546 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 177 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.120.81 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.4.01 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,265.66 புள்ளிகள் உயர்ந்து 31,159.62 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 363.15 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,111.90 புள்ளிகளில் முடிவுற்றது.