காதல் திருமணம் செய்துகொண்ட பாஜக எம்எல்ஏ மகளின் கணவர் கடத்தல்: நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு!

 

காதல் திருமணம் செய்துகொண்ட பாஜக எம்எல்ஏ மகளின் கணவர் கடத்தல்: நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு!

பாஜக எம்.எல்.ஏ மகளின் கணவர் நீதிமன்ற வாசலில் இன்று கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலகாபாத் : பாஜக எம்.எல்.ஏ மகளின் கணவர் நீதிமன்ற வாசலில் இன்று கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பித்தாரி செயின்பூர் தொகுதியின் பாஜக  எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா. இவரது மகள் சாக்ஷி மிஸ்ரா – அஜிதேஷ் குமார் என்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இதற்கு அவரது வீட்டில் எதிர்ப்பு கிளம்பவே வீட்டை விட்டு வெளியேறி காதலரை திருமணம் செய்துகொண்டார். 

bjp

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாக்ஷி மிஸ்ரா சமூக வலைத்தளத்தில்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், ‘எங்கள் திருமணம் என் தந்தைக்கு பிடிக்கவில்லை. அதனால் சில ரவுடிகளை ஏவி எங்களை மிரட்டி வருகிறார். எனது தந்தை என்னை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதனால் எங்களுக்கு காவல்துறை உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஒருவேளை எங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து  ஏற்பட்டால் அதற்கு காரணம்  என் தந்தை தான். அப்படி நடந்தால் நான் அவரை விட்டுவிட மாட்டேன். கண்டிப்பாகச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி தருவேன்’ என்று கூறியுள்ளார். 

bjp

இதனையடுத்து அலகாபாத் நீதிமன்றத்தில் கடந்த 11 ஆம் தேதி  சாக்ஷி மிஸ்ரா – அஜிதேஷ் குமார்  சார்பில்  பாதுகாப்பு அளிக்கக் கோரி ஒரு பொதுநல மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதற்காகச்  சாக்ஷி மிஸ்ரா – அஜிதேஷ் குமார் ஆகியோர் காலை 8.30 மணியளவில் நீதிமன்ற வாசல் 3ஆம் எண்ணில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்குக் கருப்பு நிற காரில் துப்பாக்கியுடன் வந்த சிலர் அஜிதேஷை காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் சிலர் சாட்சியம் அளித்த நிலையில்  நீதிமன்ற வளாகத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில்  அந்த கார் ஆக்ராவைச் சேர்ந்தது தெரியவந்துள்ளது. வழக்குக்காக நீதிமன்ற வளாகத்துக்கு வந்த நபரை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.