காணாமல் போன முகிலன் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்: அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்கள்!

 

காணாமல் போன முகிலன் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்: அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்கள்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் காணாமல் போன நிலையில், அவர் மீது  இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். 

குளித்தலை : சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் காணாமல் போன நிலையில், அவர் மீது  இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் 

sterlite

கடந்த 2018 மே 22 ஆம் தேதி  ஸ்டெர்லைட் ஆலையை  மூடக் கோரி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தின் போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 வயது மாணவி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணை நடத்திவருகிறது. காவல் துறையினர் சிலர் மீது வழக்குப் பதிவும் செய்திருக்கிறது சிபிஐ. 

மாயமான முகிலன்

mukilan

இந்தச் சூழலில்தான், தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டை ஒட்டி கலவரச் சூழல் உண்டாக்கப்பட்டதில் காவல் துறையினருக்கும் பங்கிருக்கிறது என்று குற்றஞ்சாட்டும், சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் ஆதாரமாக வெளியிட்டார் முகிலன். அதற்குப் பிறகு, மதுரைக்குச் செல்ல எழும்பூர் ரயில் நிலையம் சென்ற நிலையில் காணாமல் போயிருக்கிறார். முகிலன் மாயமானது தொடர்பாக, எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பினர் புகார் அளித்தனர்.  இதையடுத்து பல்வேறு கட்டங்களைத் தாண்டி இந்த வழக்கு,  சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் ஒன்றரை மாத  காலம் கடந்த நிலையிலும், முகிலனை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

பாலியல் வன்கொடுமை  புகார்

harassment

இந்நிலையில் முகிலன் மீது பெண் ஒருவர் குளித்தலை  அனைத்து மகளிர்   காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள புகாரில், நான் பல போராட்டங்களில் முகிலனுடன் இணைந்து  போராடியுள்ளேன். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நெடுவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் தன்னை முகிலன் பலவந்தப்படுத்தியும், திருமண ஆசைகாட்டியும்  உறவுகொண்டார். இதையடுத்து பலமுறை என்னைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்குப்பதிவு

complaint

 

இதை தொடர்ந்து அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், முகிலன் மீது, ஐபிசி பிரிவு 417,  376,  4(H) ஆகிய பெண் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முகிலன் எங்கே என்று பல்வேறு தரப்பினரும் போராடி வரும் நிலையில், பெண் ஒருவர் முகிலன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் வாசிக்க: கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 6 நாட்களுக்கு பிறகு ஒருவர் கைது; உண்மை நிலவரம் என்ன?