காங்கிரசுடன் கூட்டணி! பா.ஜ.க.வுக்கு ஆதரவு…..சிவ சேனாவின் அதிரடி அரசியல்…….

 

காங்கிரசுடன் கூட்டணி! பா.ஜ.க.வுக்கு ஆதரவு…..சிவ சேனாவின் அதிரடி அரசியல்…….

தேசத்தின் நலனை கருதி குடியுரிமை (திருத்த) மசோதாவுக்கு ஆதரவு அளித்ததாக சிவ சேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை 2.5 ஆண்டுகள் விட்டு கொடுக்க மறுத்ததால் பா.ஜ.க. உடனான கூட்டணியை சிவ சேனா முறித்து கொண்டது. மேலும் பரம எதிரியான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைத்தது. சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார்.

உத்தவ் தாக்கரே

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குடியுரிமை (திருத்த) மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நேற்று காலையில் வெளியான சிவ சேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாமனாவில், குடியுரிமை (திருத்த) மசோதா கண்ணுக்கு தெரியாத பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் என அந்த கட்சி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தது. ஆனால் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று சிவ சேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் குடியுரிமை (திருத்த) மசோதாவுக்கு ஆதரவு அளித்தார்.

அரவிந்த் சாவந்த்

இது குறித்து சிவ சேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் கூறுகையில், தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு அந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தோம். குறைந்தபட்ச பொது திட்டம் மகாராஷ்டிராவுக்கு மட்டும்தான் என தெரிவித்தார். மகாராஷ்டிராவில் சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி குறைந்தபட்ச பொது திட்டத்தை தயாரித்து அதனை செயல்படுத்த ஒப்புக்கொண்டு ஆட்சியை அமைத்தது குறிப்பிடத்தக்கது.