கவலைகள் கல் மாதிரி… கண்களைத் திறந்த காஞ்சி மகாபெரியவர்!

 

கவலைகள் கல் மாதிரி… கண்களைத் திறந்த காஞ்சி மகாபெரியவர்!

மகாபெரியவரை சந்தித்த பெண்மணி ஒருவர், அவரின் அருகில் வந்து, ‘நான் நிறைய ஸ்லோகம் சொல்றேன். ஆனால், என்னுடைய பிரச்சினைகள் தீரவே இல்லை. பகவான் இன்னும் கண் திறந்து பார்க்கலை’ என்று வருத்தப்பட்டு கூறினார்.
அதைக் கேட்ட மகாபெரியவர், `ஸ்லோகம் சொல்லும் போது சுவாமி முன்னே உட்கார்ந்து, சுவாமியை மனசிலே நிறுத்தி தானே பாராயணம் பண்றேளா?’ என்று கேட்டார்.

maha periyava

உடனே அந்தப் பெண்மணி, `வேற வேலை பார்த்துக்கிட்டே தான் சொல்றேன். அந்த அளவுக்கு மனப்பாடம் பண்ணியிருக்கேன் எல்லாமே’ என்றார் பெருமையுடன். அதற்கு மகா பெரியவர் சொன்னார்:
‘காய் நறுக்கணும்னா அரிவாள்மணை, கத்தியை கிட்டே வெச்சுக்கறோம். சமைக்கணும்னா அடுப்புகிட்டேபோகணும். குளிக்கணும், துவைக்கணும்னா தண்ணீர்ப் பக்கத்திலே போறோம். ஸ்கூட்டர், கார் எதுவானாலும் கிட்ட இருந்து ஓட்டினா தான் ஓடறது. ஸ்லோகம் சொல்லணும்னா மனசு சுவாமி கிட்டே போக வேண்டாமா? ஸர்வ அந்தர்யாமி அவன். ஆனாலும் பிரச்சினை பெருசுன்னா, பக்கத்துல உட்கார்ந்து அனுசரணையா சிரத்தையா சொல்லுங்கோ. நிச்சயம் கேட்பான். கல்லைத் தூக்கி சமுத்திரத்திலே போட்டா, மூழ்கிடும். ஆனா மரத்தாலே கப்பல் பண்ணி, அதிலே எத்தனை கல் ஏத்தினாலும் மூழ்கிறதில்லே. நம் கவலைகள் கல் மாதிரி. பகவான் தெப்பம் மாதிரி. மனசு என்கிற சமுத்திரத்திலே பகவானைத் தெப்பம் ஆக்கணும். தெய்வத்தை இணைக்கிற ஆணிகள் தான் பூஜை, மந்திரங்கள் எல்லாம். அப்புறம் கவலைகளைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம். சம்சார சாகரத்தில் மூழ்கடிக்கப்படாமல் கரை சேர்ந்து விடலாம்’ என்று அருளினார் மகாபெரியவா. கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி உட்பட பலரும் நெக்குருகிப் போனார்கள்.