கள்ள ரூபாய் நோட்டு புகாரில் தமிழகம் 3வது இடம்! ரூ.66 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

 

கள்ள ரூபாய் நோட்டு புகாரில் தமிழகம் 3வது இடம்! ரூ.66 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

நம் நாட்டில் போலி அல்லது கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் தொடர்பான புகார்கள் குறைந்துள்ளது. அதேசமயம் புகார்கள் அதிகம் பதிவான மாநிலங்களில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.

ஊழல், கருப்பு பணம், கள்ள நோட்டு போன்றவற்றை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு 2016 நவம்பரில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. இதனால் சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆனால் அதற்கு இப்போது பலன் கிடைக்க தொடங்கியுள்ளது. 

போலி ரூபாய்

கடந்த சில ஆண்டுகளாக கள்ள அல்லது போலி ரூபாய் தொடர்பான புகார்கள் குறைந்து வருகிறது. உதாரணமாக, 2016ம் ஆண்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் தொடர்பாக 1,398 வழக்குகள் பதிவாகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் இதுவரை 254 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. இந்த ஆண்டில் கடந்த ஜூன்18ம் தேதி வரை ரூ.5.05 கோடி கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2017ம் ஆண்டில் ரூ.28.1 கோடி கள்ள ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது.

 

கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் தொடர்பாக புகார்களின் அடிப்படையில், அதிகம் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டில் சென்ற மாதம் 18ம் தேதி வரை 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.65.7 லட்சம் போலி ரூபாய்  நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக 102 புகார்கள் பதிவாகியுள்ளது. 

போலி ரூபாய்

அனைத்து வங்கிகள், கருவூலங்கள் மற்றும் துணை கருவூலங்கள் மற்றும் ஆர்.பி.ஐ. அலுவலங்கள் கள்ள ரூபாய் நோட்டை பறிமுதல் செய்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதில்லை. மேலும், வங்கிகள் போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்வதில் கோட்டை விட்டு விட்டால் இறுதியில் எப்படியும் கண்டுபிடிக்கப்படும். பின்பு வேண்டும் என்றே போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ஈடுபட்டதாக கணக்கில் கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.